Published : 31 May 2017 01:31 PM
Last Updated : 31 May 2017 01:31 PM

மோடி ஆட்சியில் சுதந்திர நாட்டில் வாழும் உரிமை பறிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது: ஸ்டாலின்

சுதந்திர நாட்டில் வாழும் நமது உரிமை பறிக்கப்படும் நிலை இந்த மோடி ஆட்சியில் உருவாகியிருக்கிறது என மு.க.ஸ்டாலின் பேசினார்.

மாட்டிறைச்சி விருந்து வைத்த ஐஐடி மாணவர் தாக்கப்படும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்றால் இந்த சட்டத்தை உடனே திரும்பப் பெறாவிடில் மீண்டும் மெரீனா புரட்சி உருவாகும் என எச்சரிக்க விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மாட்டிறைச்சிக்கு தடைச்சட்டம் கொண்டு வந்த மத்திய அரசையும், அதற்குத் துணைபோகும் அதிமுக அரசையும் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (31-05-2017) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "மாட்டிறைச்சிக்கு தடை போட்டுள்ள காரணத்தால் நாடு இன்றைக்கு ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ளது. நாடு முழுவதும் இன்றைக்கு மாட்டு சந்தைகள் வெறிச்சோடிப் போயிருக்கும் கொடுமையான நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தின் விவசாயப் பெருங்குடி மக்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி, மழை பொய்த்து போனது ஒருபக்கம், வறட்சி ஒருபக்கம் என விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போன கொடுமைகள், இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்கள் பலவிதமான அல்லல் நிலைகளுக்கு ஆளாகியுள்ள இந்த நேரத்தில், இந்த கொடுமையான சட்டத்தை மோடி தலைமையிலான இந்த ஆட்சி கொண்டு வந்திருக்கிறது.

'சாதனைகளுக்குப் பதில் வேதனையே மிச்சம்'

பாஜக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகாலம் நிறைவடைந்திருக்கும் நேரத்தில், பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி செய்திருக்கக்கூடிய சாதனை என்று பார்த்தால் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நிலையில் ஒன்றுமே கிடையாது. சாதனைகளுக்கு பதில் வேதனைகளை மட்டுமே சொல்லும் நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

* பாஜக ஆட்சி வந்ததும் ஊழலை ஒழிக்க லோக்பால் அமைப்பை கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஆனால், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை.

* அதுமட்டுமல்ல, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வெளிநாட்டு வங்கிகளில் போட்டுள்ள கருப்புப் பணத்தை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்து, அந்தப் பணத்தைக் கொண்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி - உறுதியளித்தார். 15 லட்சம் வேண்டாம் 15 ஆயிரம், அதுவும் வேண்டாம், குறைந்தது 15 ரூபாயாவாது இன்றைக்கு நமது வங்கிக் கணக்குகளில் போடப்பட்டதா என்றால் இல்லை.

* நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடம் இந்த நாட்டின் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவோம் என்று வாய் சவால் விட்டார்கள். ஆனால், இதுவரையில் யாருக்காவது வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறதால் என்றால் இல்லை.

* இன்றைக்கு மாட்டிறைச்சிக்கு தடை போட்டு இருக்கிறார்கள் என்று சொன்னால், இங்கு எனக்கு முன்னால் உரையாற்றியவர்கள் சுருக்கமாக குறிப்பிட்டது போல, நாம் உண்ணக்கூடிய உணவுக்கும் ஒரு கட்டுப்பாடு, அதிலும் மோடி எதை சொல்கிறாரோ அதைத்தான் நாம் சாப்பிட வேண்டும் என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

* அரசியல் சட்டம் வழங்கியுள்ள தனி மனித உரிமை பறிக்கப்படுகிறது.

* ஒட்டுமொத்தமாக சுதந்திர நாட்டில் வாழும் நமது உரிமை பறிக்கப்படும் நிலை இந்த மோடி ஆட்சியில் உருவாகியிருக்கிறது.

'மத்திய அரசு தலையிட முடியாது'

இதற்கு முன்பாக, நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. அந்த வழக்கு விசாரணை நடந்தபோது மத்திய அரசு என்ன சொன்னது என்றால், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநிலத்தின் பட்டியலில் இருப்பது. எனவே, அதில் மத்திய அரசு சட்டம் போட முடியாது நீதிமன்றத்தில் தெளிவாக குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, வினித் சகாய் என்பவர் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த அமர்வு வழங்கிய தீர்ப்பு என்னவென்றால், அந்த வழக்கை ஏற்காமல், ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்தது.

இதனை இங்கே குறிப்பிடக் காரணம், உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு தான் இதற்கான அதிகாரம் என்று சொல்லி விட்ட நிலையில், திடீரென மத்திய அரசு இந்த சட்டத்தை இயற்றுவதற்கு என்ன காரணம்? பிஜேபி ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகாலம் முடிந்தும், எந்தத் திட்டங்களும், எந்த சாதனைகளும் மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் செய்யாத நிலையில், இப்போது அதை மூடி மறைக்கவே, மக்களை திசை திருப்பும் வகையில் இந்த சட்டத்தை இந்த ஆட்சி கொண்டு வந்துள்ளதே தவிர வேறொரு காரணம் இல்லை.

வாக்குறுதி என்னாச்சு?

2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் எடுத்துச் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் என்ன?

'இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும், அனைவரும் பங்கேற்கக்கூடிய வகையில் ஜனநாயகம் செழித்து வளர வேண்டும், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் சுமூகமான உறவு அமைந்திட வேண்டும்' என்று அன்றைய பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

அதுமட்டுமல்ல, அன்றைக்கு மோடி - ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் எடுத்துச் சொன்னார், பிரதமர் மட்டும் ’டீம் இந்தியா’ அல்ல, இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய எல்லா மாநில முதலமைச்சர்களும் ’டீம் இந்தியா’ வாக இருந்து பணியாற்றுவார்கள் என்று குறிப்பிட்டு சொன்னார். ஆனால், இன்றைக்கு நடந்துகொண்டிருப்பது என்ன?

முதலமைச்சர்கள் எல்லாம் நகராட்சித் தலைவர்களாக இருக்கக்கூடிய ஒரு நிலை. மாநிலங்கள் எல்லாம் முனிசிப்பாலிட்டிகளாக இருக்கக்கூடிய ஒரு அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறதே தவிர வேறு எதுவும் கிடையாது.

தமிழகத்தின் நிலைதான் என்ன?

எல்லா மாநிலங்களின் பிரச்சினைகளையும் எடுத்துச் சொல்வதை விட நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த தமிழ்நாட்டின் நிலை என்ன இப்போது?

6 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சி. இதில் 5 ஆண்டு காலம் அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சியில், இடையிடையே அவர் பதவி விலகிய பிரச்சினை வேறு. அந்த பிரச்சினைக்குள் நான் செல்ல விரும்பவில்லை.

அவரின் மறைவைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், இப்போது எடப்பாடி பழனிசாமி அவர்களும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளனர். நாம் இந்த ஆறு ஆண்டுகளில் மூன்று முதலமைச்சர்களை பார்த்திருக்கிறோம்.

* இந்த மூன்று முதலமைச்சர்களும் டெல்லிக்கு சென்று பிரதமரை எத்தனை முறை சந்தித்து இருக்கிறார்கள் தெரியுமா? இதுவரை மூன்று முதல்வர்களும் சேர்த்து 5 முறை பிரதமரை சந்தித்திருக்கிறார்கள். அப்படி சந்தித்த நேரத்தில் பல கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தந்திருக்கிறார்கள்.

* தமிழகம் சார்பாக தந்திருக்கக்கூடிய இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களில் ஒன்றாவது இதுவரை மோடி தலைமையில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்பதை நீங்கள் தயவு செய்து உணர்ந்துப் பார்க்க வேண்டும்.

* என்ன நடக்கிறது? நேர்மாறாக நடக்கிறது. தலைமைச்செயலகத்திற்கே வந்தார்கள். யார்? வருமான வரித்துறை அதிகாரிகள். ரெய்டு நடத்தினார்கள்.

* அதைவிட கொடுமை என்னவென்றால், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கோட்டைக்கு வந்து, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை எல்லாம் உட்கார வைத்து, அங்கே இருக்கக்கூடிய முக்கியமான கோப்புகளை எல்லாம் கொண்டு வரச்செய்து அவை குறித்து ஆய்வு நடத்துகிறார்.

அந்த ஆய்வை நடத்திவிட்டு அவர் உடனடியாக செல்லாமல், எச்சரிக்கை செய்துவிட்டு சென்றிருக்கிறார். என்ன எச்சரிக்கை என்றால், ‘உங்கள் செயல்பாட்டை வைத்துதான் நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தர முடியும். எனவே, நீங்கள் முறையோடு செயல்பட வேண்டும்’ என்று ஒரு மாநில அரசைப் பார்த்து மத்தியில் இருந்து வந்து ஆய்வு செய்யக்கூடிய ஒரு அமைச்சர் வெங்கையா நாயுடு - சொல்லிவிட்டு போகிறார் என்று சொன்னால், இதை விட வெட்கக்கேடு வேறு என்ன நமக்கு இருக்க முடியும்?

மாநில சுயாட்சிக்கு முக்கியத்துவம்

மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்திருக்கக்கூடிய மாநிலம்தான் நம்முடைய தமிழ்நாடு. காரணம், அப்போது நம்முடைய தலைவர் கலைஞர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காரணத்தால். இதே கோட்டையில் தேசிய கொடியேற்றி வைக்கக்கூடிய உரிமையை பெற்றுத்தந்த தலைவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் -.

மாநில சுயாட்சியை கொண்டு வர வேண்டும் என்பதற்காக நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதையும் ஏற்படுத்தித் தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர்தான்.

இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், மாநில சுயாட்சிக்காக சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஆட்சியும் கலைஞர் தலைமையில் இருந்த திமுக ஆட்சிதான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

என்னதான் செய்கிறது அரசு?

மாட்டிறைச்சி தடைச் சட்டம் போட்டு இன்றோடு 8 நாட்கள் ஆகப் போகிறது. இந்த 8 நாட்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய நாமெல்லாம் எதிர்க்கிறோம், குரல் கொடுக்கிறோம், நம்முடைய கண்டனத்தை தெரிவிக்கிறோம். நாம் மட்டுமல்ல, பல மாநிலங்களின் முதல்வர்கள் கண்டிக்கிறார்கள். தடையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, இந்த சட்டத்தை பற்றி தங்களுடைய கருத்துகளை சொல்கிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடியிடம் போய், ‘மாட்டிறைச்சி தடைச் சட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று பத்திரிகை நிருபர்கள் கேட்கிறார்கள். அப்படி கேட்டபோது முதலமைச்சர் என்ன பதில் சொல்கிறார் தெரியுமா? ‘நான் முழுமையாக படித்துப் பார்த்து விட்டுதான் பதில் சொல்லுவேன்’ என்று சொல்கிறார். அவர் மட்டுமல்ல, அவருக்கு கீழே பணி புரிந்து கொண்டிருக்கும் எல்லா அமைச்சர்களும் சொல்லக்கூடிய பதில்கள் இதுவாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. நாங்கள் படித்துப் பார்த்துவிட்டுத்தான் அதுகுறித்து விளக்கம் கொடுக்க முடியும் என்று சொல்லக்கூடிய நிலையில் ஒரு முதலமைச்சர் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிறார்.

சட்டம் போட்டு 8 நாட்கள் ஆகிறது. கேரளத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர், ‘இச்சட்டத்தை நிறைவேற்ற நாங்கள் தயாராக இல்லை’, என்று வெளிப்படையாக தன்னுடைய அறிக்கையை வெளியிடுகிறார். அதேபோல், மேற்கு வங்க முதல்வராக இருக்கக் கூடிய மம்தா பேனர்ஜி -, ‘இது கொடுமையான சட்டம். மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடக் கூடாது.’ என்று தெளிவாக அவர் அறிக்கை விடுகிறார். பக்கத்தில் இருக்கக்கூடிய புதுவை மாநிலத்தின் முதல்வர் நாராயணசாமி -, சட்டத்தை கண்டித்து, ’அதை நிறைவேற்ற முடியாது’, என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறார். திரிபுரா மாநிலத்தின் முதல்வரும் சட்டத்தை எதிர்த்து அறிக்கை வெளியிடுகிறார்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய திமுக, காங்கிரஸ் கட்சி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என எல்லா தோழமைக் கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு கூட்டறிக்கையை நேற்றைய தினம் வெளியிட்டு இருக்கிறோம். அதையாவது படித்துப் பார்த்திருக்கிறாரா முதலமைச்சர் எடப்பாடி -? அதைப் படித்துப் பார்க்க பயப்படுகிறார்.

அவருக்கு படித்துப் பார்க்க ஆசைதான். ஆனால், அதை படித்துப் பார்த்தால் அவருக்கு அதில் இருக்கக்கூடிய வாசகங்கள் தெரியவில்லை. அதற்கு பதிலாக அவருக்கு தெரிவதெல்லாம் வருமான வரித்துறைதான். அதைப் படித்துப் பார்க்கிற போது சி.பி.ஐ. ரெய்டு தொடர்ந்து வருமா என்ற அச்சம்தான் அவருக்கு வருகிறது. அதைப் படித்துப் பார்க்கிற போது ஆர்.கே.நகர் தொகுதியில் 89 கோடி ரூபாய் விநியோகம் செய்யப்பட்டதாக ரெக்கார்டுகள் எடுத்து இருக்கிறார்களே, அந்த ரெக்கார்டுகளில் 8 பேர் இடம் பெற்றிருக்கிறார்களே, அந்த 8 பேரில் முதல் ஆள் யாரென்று தெரியுமா? முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமிதான். ஆக, அந்த அச்சத்தின் காரணமாகத்தான் அதை அவர் படித்துப்பார்க்க பயந்து கொண்டிருக்கிறாரே தவிர வேறல்ல.

வரவேற்கத்தக்க உத்தரவு

நேற்றைக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் மாட்டிறைச்சி தடைச் சட்டத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்களே? சமூக அமைப்பை சார்ந்திருக்கக்கூடிய அம்மையார் செல்வ கோமதி மாட்டிறைச்சி தடைச் சட்டத்துக்கு தடை போட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த பொது நல வழக்கில் நேற்றைக்கு மாட்டிறைச்சி தடைச் சட்டத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, அண்ணன் சுபவீ - சொன்னார்களே, ஐ.ஐ.டி-யில் படித்துக் கொண்டிருக்கும் சூரஜ் என்ற மாணவர் படுமோசமாக தாக்கப்பட்டு, அவருடைய கண் பாதிக்கப்பட்டு, கண் அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கக்கூடிய கொடுமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், நான் இந்தப் போராட்டத்தின் மூலமாக மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சிக்கும், கவலையில்லாமல் இருக்கக்கூடிய தமிழக ஆட்சிக்கும் எச்சரிக்கையோடு தெரிவிக்க விரும்புகிறேன், நான் தொடக்கத்திலே சொன்னதுபோல இந்தப் போராட்டத்தை நாங்கள் முதல் கட்டமாகத்தான் தொடங்கியிருக்கிறோம். இந்தப் போராட்டம் தொடரும்.

எனவே, நேற்றைய தினம் மதுரை உயர் நீதிமன்ற கிளை தந்திருக்கக்கூடிய அந்தத் தீர்ப்பை உணர்ந்துப் பார்த்து, உடனடியாக மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை திரும்பப் பெறவில்லை என்று சொன்னால் உறுதியோடு சொல்கிறேன், மீண்டும் மெரீனா புரட்சி தமிழகத்திலே உருவாகும். அப்படி உருவாகக்கூடிய நிலைக்கு நாம் நிச்சயம் தள்ளப்பட இருக்கிறோம். அதற்கு நாம் தயாராக இருப்போம், தயாராக இருப்போம் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச்சொல்லி அனைவருக்கும் நன்றி கூறி என் கண்டன உரையை இந்த அளவோடு நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்"

இவ்வாறு தளபதி - உரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x