

தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுகவில் வட்ட செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் சிலரை மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதா நியமித்தார்.
இந்நிலையில், நேற்று காலை தென்சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தி.நகர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், முதல்வரின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்ற னர். அங்கு போலீசார் அனுமதிக்காததால், அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘மாற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அதே பதவியில் நியமிக்க வேண்டும். மாவட்ட செயலாளர் அளித்த பட்டியலை நிறுத்தி வைத்து, விசாரணை நடத்தி, அதன் பின் தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்தோம். கட்சியில் பணம் பெற்றுக் கொண்டு பதவி வழங்கப்படுவதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.