

மும்பையில் இருந்து சென்னைக்கு கப்பலில் கொண்டு வரப்பட்ட கன்டெய்னர்களில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு பண்டல்கள் இருப்பதாக வந்த புகாரின்பேரில் சென்னை துறைமுகம் முழுவதும் அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மும்பை துறைமுகத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்துக்கு வந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட கன்டெய்னர்களில், பல கோடி மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு பண்டல்கள் இருப்பதாக மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று முன்தினம் காலையில் சுங்கத்துறை அதிகாரிகள், வருவாய் புலனாய்வு அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படையினர் சென்னை துறைமுகம் முழுவதையும் சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். துறைமுகத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டு எல்லா கன்டெய்னர்களிலும் சோதனை நடத்தினர்.
துறைமுகத்தை சுற்றி பல இடங்களில் கிடங்குகள் உள்ளன. அங்கிருந்த கன்டெய்னர்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அனைத்து கன்டெய்னர்களிலும் ஸ்கேன் பரிசோதனையும் செய்யப் பட்டது. லாரிகளில் கொண்டுவரப் பட்ட கன்டெய்னர்கள் துறைமுகத் துக்குள் அனுமதிக்கப்படாமல் சாலையிலேயே நிறுத்தி வைக்கப் பட்டன. சோதனை செய்யப்பட்ட கன்டெய்னர்கள் மட்டுமே வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கப் பட்டன.
நேற்று முன்தினம் தொடங்கப் பட்ட சோதனையில் 25 அதிகாரிகள் இருந்தனர். கன்டெய்னர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் நேற்று சுமார் 100 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கன்டெய்னர்களுடன் ஏராளமான லாரிகள் மணலி, எண்ணூர், மாதவரம் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மேலும், கன்டெய்னர்களை இறக்குவதற்காக 4 கப்பல்கள் நடுக்கடலில் காத்து நிற்கின்றன.
இந்தியாவில் தாக்குதல் நடத்த ஒரு கன்டெய்னரில் ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டதாகவும், இதை அறிந்த மத்திய உளவுப் பிரிவினர் கொடுத்த தகவலின் பேரிலேயே தீவிர சோதனை நடத்தப்படுவதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.