

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் நடத்தும் போராட்டம் நான்காவது நாளாக தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் ரயில் மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வியாழக்கிழமை பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயிலை இடைமறித்து போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது லோகேஷ். ஆர் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்றும் சேலத்தில் ரயில்களை இடைமறித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.