

பழனி - திருச்செந்தூர் இடையே புதிய பயணிகள் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) தொடங்கப்படுகிறது.
தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஏ.கே.ரஸ்தோகி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 2013-14-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தபடி பழனி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் (எண் 56769 - 56770) ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்படுகிறது. பழனியில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த ரயில் சேவையை மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தொடக்கி வைக்கிறார். அங்கிருந்து புறப்படும் தொடக்க விழா ரயில் மாலை 5.55 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூரிலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு பழனியை அடையும்.
இந்த ரயில் திங்கள்கிழமை (பிப்.17) முதல் குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்பட உள்ளது. அதன்படி பழனி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் (எண் 56769) காலை 7.20 மணிக்கு பழனி யிலிருந்து புறப்பட்டு காலை 8.45-க்கு திண்டுக்கல், 10.15-க்கு மதுரை, பிற்பகல் 2 மணிக்கு திருநெல்வேலி, மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும்.
இதுபோல் திருச்செந்தூர் - பழனி பயணிகள் ரயில் (எண்- 56770) திருச்செந்தூரிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, 11.25-க்கு திருநெல்வேலி, மாலை 4.10-க்கு மதுரை, மாலை 5.35-க்கு திண்டுக்கல், இரவு 7.20-க்கு பழனியை அடையும்.
இந்த ரயில் சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை, திருப்பரங் குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சிமணியாச்சி, நாரைகிணறு, தாழையூத்து, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமு கநேரி, காயல்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.