Published : 27 Dec 2013 07:39 PM
Last Updated : 27 Dec 2013 07:39 PM

தி.மு.க-வில் மீண்டும் சேர்ந்தார் டி.ராஜேந்தர்

லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் தி.மு.க-வில் மீண்டும் இணைந்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை அவரைச் சந்தித்துப் பேசிய ராஜேந்தர், தான் தி.மு.க-வில் இணைந்துவிட்டதாக அறிவித்தார்.

இதுகுறித்து டி. ராஜேந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

'வெள்ளிக்கிழமை காலை தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி என்னை சந்தித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். அந்த அழைப்பை ஏற்று நான் கருணாநிதியைச் சந்தித்தேன்.

என்னிடம் மனம் விட்டு அவர் பேசினார். தன் கூடவே இருக்க வேண்டுமென்று அன்பு கட்டளையிட்டார். உன் லட்சியமே தி.மு.க.வில் இருப்பதுதான். ஆகவே, தி.மு.க-வில்தான் நீ இருக்க வேண்டும் என்று கூறினார். நான் அவரைத் தவிர யாரையும் தலைவராக ஏற்றுக்கொண்டதில்லை. இப்போது அவரின் வார்த்தையை மீறும் சக்தி எனக்கு இல்லை.

சிறு வயதில் நிலவைக் காட்டி குழந்தைகளை வளர்ப்பதைப் போல, கருணாநிதியைக் காட்டிதான் என்னை எனது பெற்றோர் வளர்த்தனர். அரசியல் உட்பட எல்லாத் துறைகளிலும் கருணாநிதிதான் எனது குரு. ஆகவே, தி.மு.க-வில் நான் சேர வேண்டும் என்ற அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.

மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி கட்சியின் தலைவரான கருணாநிதிதான் முடிவு செய்வார். எனது பிரசாரம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக இருக்குமா அல்லது பா.ஜ.க-வுக்கு எதிராக இருக்குமா என்பதைப் பற்றியெல்லாம் இப்போது எந்த முடிவும் செய்யவில்லை' என்றார் டி.ராஜேந்தர்.

டி.ராஜேந்தரின் அரசியல் பயணம்:

எம்.ஜி.ஆர். காலத்தில் தி.மு.க-வின் முக்கிய பிரச்சார தலைவராக விளங்கிய டி.ராஜேந்தர் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் செயல்பட்டார். தி.மு.க-விலிருந்து விலகிய டி.ராஜேந்தர் தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் மீண்டும் தி.மு.க-வில் சேர்ந்த அவர் 1996- சட்டப்பேரவைத் தேர்தலின்போது சென்னை பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு மீண்டும் தி.மு.க-விலிருந்து விலகிய அவர், 2004-ம் ஆண்டு அனைத்திந்திய லட்சிய தி.மு.க. என்ற கட்சியைத் தொடங்கினார்.

தி.மு.க-வுடன் மீண்டும் இணைந்து செயல்பட்ட டி.ராஜேந்தர் 2006-ம் ஆண்டு அமைந்த தி.மு.க. ஆட்சியின்போது தமிழ்நாடு அரசின் சிறுசேமிப்புத் திட்டக் குழுத் துணைத் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.

எனினும் அந்தப் பதவியை பின்னர் ராஜினாமா செய்த ராஜேந்தர் தனது லட்சிய தி.மு.க. பணிகளில் இறங்கினார். இந்தச் சூழலில்தான் தற்போது மீண்டும் அவர் தி.மு.க-வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார்.

டி.ராஜேந்தர் மீண்டும் தி.மு.க-வில் இணைந்தது குறித்து கட்சியின் தலைவரான கருணாநிதி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.



கருணாநிதி வரவேற்பு

திமுகவில் டி.ராஜேந்தர் இணைந்தது குறித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், டி.ராஜேந்தர் திமுகழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து கழகத்தின் வளர்ச்சிக்காக பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் கழகத்தில் இருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டது. அதுகுறித்து நானும் அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தேன். ராஜேந்திரனும் விளக்கம் அளித்திருந்தார்.

இப்போது திமுகவின் பிரச்சார பகுதியை மேலும் வலுமைப்படுத்தும் எண்ணத்தோடு என் அன்பு அழைப்பினை ஏற்று என் விருப்பப்படி மீண்டும் திமுகவில் அவர் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். கழக உடன்பிறப்புகளும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கருணாநிதி கூறியுள்ளார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x