

தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விடுதி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி ஜார்ஜ் சாலையில் அமைந்துள்ளது தருவை விளையாட்டு மைதானம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இந்த மைதானம் உள்ளது.
பல்வேறு வசதிகள்
இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், நீச்சல் குளம், வாலிபால் மைதானம், ஸ்குவாஷ் மைதானம் என, பல்வேறு வசதிகளுடன் இந்த மைதானம் செயல்பட்டு வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இங்கு பயிற்சி எடுத்து வருகின்றனர்.
தருவை மைதானத்தில் கடந்த 2013-ம் ஆண்டு விளையாட்டு விடுதி தொடங்கப்பட்டது. இந்த விடுதியில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஸ்குவாஷ் விளையாட்டுகளுக்கான 55 மாணவர்கள் தற்போது தங்கி படித்து வருகின்றனர்.
ரூ.85 லட்சத்தில் விடுதி
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு தினமும் ரூ.250 மதிப்பிலான சத்தான உணவுகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அரசு இலவசமாக செய்து கொடுத்துள்ளது. மைதானத்தின் வடகிழக்கு ஓரத்தில் இரண்டு மாடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு விடுதி ரூ.85 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இந்த கட்டிடத்தை திறந்து வைக்க, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை கட்டிடம் திறக்கப்படவில்லை. இதனால், விடுதி மாணவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர் மாடத்துக்கு கீழ் உள்ள வசதிகளற்ற கட்டிடத்திலேயே தங்கியுள்ளனர்.
மாணவர்கள் உடல் நலத்தோடு இருந்தால் தான் விளையாட்டில் சிறந்து விளங்க முடியும். அதற்கு, அவர்கள் தங்கும் இடமும் வசதியாக இருக்க வேண்டும். எனவே, விளையாட்டு விடுதி கட்டிடத்தை விரைவாக திறந்து வைக்க வேண்டும் என, விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்விளையாட்டு அரங்கம்
இதேபோல் விளையாட்டு விடுதி கட்டிடத்தை ஒட்டி ரூ.10 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடமும் பல மாதங்களாக திறக்கப்படாமல் கிடக்கிறது.
இதனைத் தவிர விளையாட்டு மைதான வளாகத்தில் ரூ.3 கோடி செலவில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
எனவே, உடற்பயிற்சி கூடம், பல்நோக்கு உள்விளையாட்டு மைதானம் ஆகியவற்றையும் விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.