

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2-வது நாளாக நேற்றும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மழை நீடித்தது. குறிப்பாக சென்னையில் அடையார், மயிலாப்பூர், மந்தவெளி, ராயப்பேட்டை, தி.நகர், கிண்டி, நுங்கம்பாக்கம், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, பல்லவாரம், குரோம் பேட்டை, மீனம்பாக்கம், தாம் பரம், வண்டலூர், எழும்பூர், வண்ணாரப் பேட்டை, வியாசர்பாடி, செங் குன்றம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது.
கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் பெயர்ந்து மோசமடைந்ததாலும், தண்ணீர் தேங்கி நிற்பதாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தி.நகர், வடபழனி, அடையாறு, வியாசர்பாடி, தண்டையார் பேட்டை, தாம்பரம், மந்தவெளி பஸ் நிலையங்கள், பணிமனைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கியமான சாலையில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிப் பட்டனர். சாலைகளை கடந்து செல்லவே பல மணிநேரம் ஆனது.
சுரங்கப்பாதையில் சிக்கிய பஸ்கள்
தி.நகரில் உள்ள துரைசாமி சுரங்கபாதையில் கனமழை காரணமாக நேற்று முன்தினம் மாநகர பஸ் (11-எச்) திடீரென பழுதாகி நின்றது. அதேபோல் நேற்று சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த நீரில் தடம் எண் 11-ஜி என்ற பஸ் மூழ்கியது. இதையடுத்து, பயணிகள் பாது காப்பாக இறக்கிவிடப்பட்டனர். இதன்காரணமாக அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சேத்துப்பட்டு சுரங்கப் பாதையிலும் நேற்று ஒரு பஸ் திடீரென பழுதாகி நின்றது. அண்ணாசாலை எல்ஐசி அருகே 3 மாநகர பஸ்கள் பழுதாகி நின்றன. இதனால், கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பஸ்கள் வேறு வழியாக திருப்பிவிடப்பட்டன. பூந்தமல்லி சாலை வழியாக இயக் கப்படும் பஸ்களும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
ஜி.எஸ்.டி. சாலையில் நெரிசல்
மழை காரணமாக சென்னையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் அதிமுகவினரால் நிலைமை மேலும் நெரிசலானது. ஜாமீனில் விடுதலை செய்யப் பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நேற்று மாலை பெங்களூரில் இருந்து சென்னை வந்தார். அவரை வரவேற் பதற்காக காலையில் இருந்தே சென்னை விமான நிலையத்தில் அதிமுகவினர் திரண்டனர்.
ஜெயலலிதா செல்லும் வழியில் ஆங்காங்கே அதிமுகவினர் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களின் வாகனங்களும் சாலையோரமே நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் கடும் அவதிப்பட்டனர். ஜி.எஸ்.டி. சாலையில் பல்லாவரம் தொடங்கி கிண்டி வரை வாகனங்கள் தேங்கி நின்றன.