Last Updated : 16 Jul, 2016 02:59 PM

 

Published : 16 Jul 2016 02:59 PM
Last Updated : 16 Jul 2016 02:59 PM

அமைப்புசாரா தொழிலாளர்களின் நலத்திட்ட உதவிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டம்: திருவள்ளூர், காஞ்சியில் விரைவில் தொடக்கம்

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் தங்கள் பெயர்கள் பதிவு செய்வது, நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிப்பது போன்றவை விரைவில் ’ஆன்லைன்’ மூலம் செய்யும் புதிய திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம், இடைத்தரகர்களாக செயல்படும் தொழிற்சங்க நிர்வாகிகளின் செயல் பாடுகள் கட்டுப்படுத்தப்படும்.

ஊரக தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் அமைப்புச்சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன் கருதி தமிழ் நாடு அரசு 1982 ம் ஆண்டு தமிழ் நாடு அரசு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் சட்டம் என்னும் ஒருங்கிணைந்த சட்டத்தை இயற்றியது. இச்சட்டம் அமைப்புச்சாரா தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், பல் வேறு நலத்திட்டங்களை வழங்கவும் உருவாக்கப்பட்டது.

பல்வேறு வகையான17 நலவாரியங்கள் உள்ளன. 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த நலவாரியத்தில் பதிவு செய்துகொள்ளலாம். விபத்து மரணம், விபத்து ஊனம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவி, கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், முடக்க ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த நலவாரியங்களில் தங்களது பெயர்களை தற்போது நேரடியாக சென்று பதிவு செய்கின்றனர். இந்நிலையில், ‘ஆன்லைன்’ மூலம் பதிவு செய்யும் முறை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து, தொழிலாளர் நலத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

அமைப்புசாரா தொழிலாளர்கள் அரசு வழங்கும் நலத்திட்ட உதவி கள், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை பெற தற்போது மாவட்ட தலைநகரில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்துக்கு வந்து பதிவு செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் வரும்போது அவர்களு டைய ஒருநாள் வேலை தடைபட்டு வருமானம் பாதிக்கிறது.

அத்துடன் வாரியத்தில் தங் களது பெயர்களை பதிவு செய்ய அவர்களை அழைத்து வரும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அவர்களிடம் இருந்து கமிஷன் பெறுகின்றனர். அதேபோல் நலத் திட்ட உதவிகளை பெறும்போதும் கமிஷன் பெறுகின்றனர்.

இதனால், நலத்திட்ட உதவிகள் முழுமையாக பயனாளிகளை சென்றடைவதில்லை. இதைத் தவிர இடைத்தரகர்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது.

எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ‘ஆன்லைன்’ மூலம் தங்களது பெயர்களை நலவாரியத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் வீட்டில் இருந்தபடி 24 மணி நேரமும் இதை மேற்கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுடைய பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதோடு, அவர்களுக்கு செலவும், நேரமும் மிச்சமாகும்.

தமிழக அரசு விரைவில் இச்சேவையை தொடங்க உள்ளது. முதற்கட்டமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இத்திட்டம் பரீட்சார்த்த அடிப்படை யில் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x