Last Updated : 29 Apr, 2017 12:52 PM

 

Published : 29 Apr 2017 12:52 PM
Last Updated : 29 Apr 2017 12:52 PM

காணாமல் போன கட்டுமரங்களுக்கு தெர்மாகோல் மூலம் மீனவர்கள் புத்துயிர்

நவீன மீன்பிடி முறைகள் மூலம் காணாமல் போன கட்டுமரங்களுக்கு ராமேசுவரம் பாரம்பரிய மீனவர்கள் தெர்மாகோல் மூலம் புத்துயிர் அளிக்கத் தொடங்கி உள்ளனர்.

பண்டைய தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் கடல், ஆறு, ஏரி, குளம் என நீர் நிலைகளால் சூழப்பட்டுள்ளன. நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலங்களில் நீர் நிலைகளை போக்கு வரத்துக்குப் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் மரத்துண்டுகளை ஒன்றாகக் கட்டி தண்ணீரில் மிதக்க வைக்க முடியும் என்பதை தமிழர்கள் கண்டறிந்தனர். இதுவே கட்டு+மரம்=கட்டுமரம் என்றானது.

கட்டுமரங்களை போக்கு வரத்து க்காகவும், நீர் நிலைகளில் உணவு சேகரிப்பதற்காகவும் பயன்படுத்தப் பட்டதை சங்க இலக்கியங்களில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தோணி, பங்றி, திமில் ஆகிய பல வார்த்தைகள் மூலம் அறியலாம்.

தமிழகத்துக்கு கடல் மார்க்கமாக 1690-ம் ஆண்டு வந்த வில்லியம் டம்பியர் என்கிற ஆங்கிலேயப் பயணி தமிழ ர்களின் கட்டுமரங்களைப் பற்றி தனது பயணக் குறிப்பில் எழுதியுள்ளார். catamaran என்கிற வார்த்தை 17-ம் நூற்றாண்டில் தமிழில் கட்டுமரம் என்ற சொல்லில் இருந்து வந்ததாக ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆங்கில அகராதி குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் சிங்கள மொழியிலும் கட்டுமரம் என்றே வழங்கப்படுகிறது. இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், இலங்கையிலும் பயன்பாட்டில் உள்ள கட்டுமரங்களை கோரமண்டல், மன்னார் வளைகுடா, ஆந்திரா, ஒடிசா என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இத்தகைய கட்டுமரங்கள் நவீன மீன்பிடி முறைகளால் அழிந்து வருகின்றன.

இந் நிலையில், காணாமல்போன கட்டுமரங்களுக்கு தெர்மாகோல் மூலம் புத்துயிர் அளிக்கத் தொடங்கி உள்ளனர் ராமேசுவரம் பாரம்பரிய மீனவர்கள். இது குறித்து ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர் திரித்துவம் பட்டங்கட்டி கூறியதாவது: தமிழகத்தில் விசைப்படகுக்கு அனுமதிக்க வழங்கிய நாளில் இருந்து கட்டுமரங்களின் அழிவு தொடங்கி விட்டது. தமிழகக் கடற்கரைகளை 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி அலைகள் தாக்கியபோது அதிக அளவில் காணாமல் போனதும் கட்டுமரங்கள் தான்.

ஒரு பாரம்பரிய கட்டுமரத்தின் முன் பகுதி அணியம் என்றும், பின்பகுதி புறமாலை என்றும், மரத்துண்டுகளை இணைத்து கட்டப்பட்ட பகுதி வாரிக்கல் என்றும், கட்டுமரத்தை நேராகச் செலுத்தப் பயன்படும் பலகையை அடைப்பலகை என்றும், காற்றின் உதவியுடன் செலுத்த துணியாலான பாய்களை கூரப் பாய்கள் என்றும் சொல்வோம்.

கட்டுமரங்களை தயாரிக்க அந்தந்த கடல் பகுதியில் கிடைக்கக்கூடிய வேப்பமரம், நாவல்மரம், இலுப்பை ஆகிய மரங்களைப் பயன்படுத்துவோம். கட்டுமரங்களை செய்பவருக்கு ஓடாவி என்று பெயர்.




மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாரம்பரிய முறையில் பயணித்த மீனவர்கள். (கோப்புப் படம்)

புதிதாக கட்டப்பட்ட கட்டுமரத்தை கடலில் மிதக்க வைத்து சோதனை செய்த பிறகு முதன்முதலாக மீன்பிடிக்கச் செல்லும்போது பூஜை செய்து கடலில் இறக்குவோம்.

இந்த பூஜையின்போது கட்டுமரத்தை செய்த ஓடாவிக்கு முதல் மரியாதை செய்யப்படும். கட்டுமரத்தில் குறைந்தது ஒருவர் முதல் அதிகபட்சம் ஐந்து பேர் வரை சென்று மீன்பிடிப்பர்.

ஒரு காலத்தில் இறால், கணவாய், நண்டு ஆகியவை வலையில் சிக்கினால் கடலிலேயே விட்டுவிடுவோம். இப்போது விசைப்படகுகளில் பிடிக்கப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் ராமேசுவரத்தின் கரையோரங்களில் மீன்வளம் இல்லாமல் போனது. இதனால் பாரம்பரிய கட்டுமரங்களும் குறைந்து விட்டது. கடற்கரையில் இருந்து ஆழமான பகுதியில் நிற்கும் படகுகளுக்குச் செல்வதற்கு மிதவை தேவைப்பட்டதால் தெர்மாகோல் மூலம் குறைந்த விலையில் கட்டுமரங்களை செய்யத் தொடங்கினோம். தற்போது இந்த தெர்மாகோல் கட்டுமரங்களே பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது.

தெர்மாகோல் கட்டுமரம் அதிக எடை இல்லாதது. வீட்டில் இருந்து சைக்கிள் மூலம் கூட கடற்கரைக்கு கொண்டு சென்று விடலாம். குறைந்தது ஆயிரம் ரூபாயில் இதை யார் வேண்டுமானாலும் தயாரிக்க முடியும்.

தெர்மாகோல்களை மிதவை போல் ஒன்றிணைத்து மூங்கில் மரத்தின் உதவியுடன் நைலான் கயிற்றில் கட்டி சுற்றிலும் சிமிண்ட் சாக்கைக் கொண்டு மூடிவிட்டால் தெர்மாகோல் கட்டுமரம் தயாராகி விடும். சவுக்கு மரம் கம்பை துடுப்பாகவும், கல்லை நங்கூரமாகவும் பயன்படுத்தலாம். அவ்வப்போது சிமெண்ட் சாக்கு, தெர்மாகோல் சீட்டுகள் ஆகியவற்றை மாற்றினால் போதும்.

தெர்மாகோல் கட்டுமரங்களை எளி தாகப் பயன்படுத்த முடியும். எரிபொருள் தேவையில்லை. தூண்டில்கள், சிறிய ரக வீச்சு வலைகளும் மீனவனின் உழைப்பு மட்டும் போதுமானது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x