

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தோக்க வாடி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஏ.ராஜா(38). இவரது மனைவி உஷா(32), மகன் சூர்யா (22). ஜூலை 11-ம் தேதி இவர்கள் மூவரும் செங்கம்-போளூர் பிரதான சாலையில் உள்ள கடை வீதிக்கு சென்றனர். அப்போது ராஜாவுக்கும், உஷாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் 3 பேரையும் தாக்கினர். இது தொடர்பான காட்சிகள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், தாக்குதல் நடத்திய போலீஸார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்ட 3 பேரையும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றி அரசு செலவில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் போலீஸாரால் தாக்கப்பட்ட ராஜா மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அடுத்த 3 நாட்களில் அவர்கள் குணமடைவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.