Last Updated : 11 Feb, 2014 12:00 AM

 

Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM

சென்னையில் வீடு கட்டும் திட்ட அனுமதி பெறுவதில் அதிரடி மாற்றம்: அரசியல்வாதிகள் தலையீட்டை தடுக்க நடவடிக்கை

சென்னையில் வீடு கட்டுவோர் அதற்கான திட்ட ஒப்புதலை பெறுவதில் அரசியல்வாதிகள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகளின் குறுக்கீடுகளைத் தவிர்ப்பதற்காக சென்னை மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது. இதன்படி, இனி ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள மண்டல துணை ஆணையர்கள் மட்டுமே கட்டிடங்களுக்கு ஒப்புதல் அளிப்பார்கள்.

செயற்பொறியாளர் அலுவலகங்கள்

சென்னை மாநகரில் கட்டப்படும் தரைத்தளம் மற்றும் 2 அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதிக்கு ஒப்புதலை மாநகராட்சி வழங்கி வருகிறது. புதிதாக கட்டிடம் கட்ட நினைத்தாலோ, ஏற்கெனவே கட்டிய கட்டிடங்களில் மேற் கொண்டு புதிய மாற்றங்களைச் செய்ய நினைத்தாலோ, சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் செயற் பொறியாளரிடம் திட்ட அனுமதிக்கு ஒப்புதல் பெறவேண்டும்.

ஆனால், அத்தகைய கட்டிடங்கள் கட்டப்படும் இடங்களுக்கு பெரும்பாலும் மாநகராட்சியின் உதவிப் பொறியா ளர்களே வந்து பார்வையிட்டு, திட்ட ஒப்புதல் அளிப்பதற்கான பரிந்துரைகளை அளிக்கின்றனர். இதை அடிப்படையாக வைத்தே கட்டிடம் கட்டுவதற்கான திட்ட ஒப்புதல் வழங்கப்படுகிறது.

அரசியல்வாதிகள் தலையீடு

இந்த நடைமுறையின் கீழ், அந்தந்த வார்டுகளில் உள்ள சில அரசியல்வாதிகள், பெண் அரசியல்வாதிகளின் கணவர்கள் ஆகியோர், நடுத்தர மற்றும் சாதாரண வசதி படைத்த மக்களை மிரட்டி பணம் வசூலிப்பதாகவும், அதற்கு கீழ் நிலையில் உள்ள சில அரசு அதிகாரிகள் உதவி வருவதாகவும், அரசுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த முறைகேட்டுக்கு முடிவு கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக கட்டிட அனுமதி திட்டத்தில் அதிரடி மாற்றங்கள் விரைவில் கொண்டு வரப்பட வுள்ளன. இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், ‘தி இந்து’ நிருபரிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

ஐஏஎஸ் அதிகாரிகள்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தரைத்தளம் மற்றும் 2 அடுக்குமாடி வரையிலான குடியிருப்புகளுக்கு, கட்டிட அனுமதி அளித்து வருகிறோம். இதில் சில தவறுகள் நடப்பது தெரியவந்திருப்பதால் கட்டிட திட்ட அனுமதி பெறுவதில் சில மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இனி மாநகராட்சி திட்ட அனுமதி வழங்கக் கூடிய கட்டிடங்களுக்கான ஒப்புதலை, அந்தந்த மண்டல செயற்பொறியாளர்களுக்குப் பதிலாக, ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள மண்டல துணை ஆணையர்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கட்டிட திட்ட அனுமதியை மத்திய, வடக்கு மற்றும் தென்சென்னையின் மண்டல துணை ஆணையர்கள் மட்டுமே வழங்குவார்கள்.

ஊழியர்கள், கோப்புகள் இடமாற்றம்

இதற்காக, செயற்பொறி யாளர்கள் அலுவலகத்தில் உள்ள கோப்புகளை மண்டல துணை ஆணையர் அலுவலகங்களுக்கு மாற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தற்போது, மண்டல துணை ஆணையர் அலுவலகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், இந்த கூடுதல் பணிச்சுமையைச் சமாளிப்பதற்காக மாநகராட்சியின் செயற்பொறியாளர் அலுவல கங்களில் இருந்து ஊழியர்களை அங்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேற்கண்ட அனைத்துக்கும் சிஎம்டிஏ ஒப்புதல் அளித்து விட்டது என்று விக்ரம் கபூர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x