

சைதாப்பேட்டையில் இருந்து கிண்டிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் புதிய மேம்பாலம் கட்டவேண்டும் அல்லது அந்த சாலையை இரு வழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜிஎஸ்டி சாலையும் அண்ணா சாலையும் இணையும் முக்கிய இடமாக கிண்டி இருக்கிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் கிண்டி சந்திப்பு எப்போதும் நெரிசல் மிகுந்ததாக காணப்படுகிறது.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலையை கடந்து செல்ல ஒரு மணிநேரம் ஆகிவிடுகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், மாநகர பேருந்துகளில் பயணம் செய்வோரும் அவதிப்படுகின்ற னர். சில நேரங்களில் சாலை விபத்துகளும் நடக்கின்றன. எனவே, இதற்கு மாற்றுத்தீர்வு காண வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, ‘‘கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு இந்த வழித் தடத்தில் மெட்ரோ ரயில் பணி களை மேற்கொள்வதற்காக போக் குவரத்தில் மாற்றம் செய்தார்கள்.
சைதாப்பேட்டையில் இருந்து கிண்டிக்கு நேரடி வழியாக சென் றால் அரை கிலோ மீட்டர்தான் ஆகும். ஆனால், சுற்றி செல்வ தால் 3 கி.மீ ஆகிறது. மேலும் இப்பகுதியில் கடுமையான போக் குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
தற்போது, சின்னமலையில் இருந்து விமானநிலைம் வரை யில் மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எனவே, சைதாப்பேட்டையில் இருந்து நேரடியாக கிண்டிக்கு (இரு வழிபாதையாக) செல்ல வழிவகை செய்ய வேண்டும். அல்லது கிண்டி பகுதியில் ஆல்டா சந்திப்பில் சிறிய மேம்பாலம் அமைத்து அடையார் வழியாக செல்லும் வாகனங்களை திருப்பி விடலாம். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்” என்றனர்.
இது தொடர்பாக நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஜிஎஸ்டி சாலை யில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகளாலும், ஒரே நேரத்தில் வாகனங்கள் குவிந்து விடுவதாலும்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, விமானநிலையம் சின்னமலை வரையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியவுடன் போக்குவரத்து மாற்றம் குறித்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.