

தமக்கு விருப்பமான மதுபான வகையை தேர்வு செய்து கொள்வ தற்கு நுகர்வோர் அனுமதிக்கப்பட வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்ணாவூர் கிராமத்தில் இயங்கி வரும் கோல்டன் வாட்ஸ் என்ற மதுபான நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீது நீதிபதி வி.தனபாலன் விசாரணை மேற்கொண்டார். அப்போது மனுதாரர் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கோல்டன் வாட்ஸ் நிறுவனத்திடமிருந்து டாஸ் மாக் நிறுவனம் மதுபானங்களை கொள்முதல் செய்வதில்லை என்றும், இது பாரபட்சமான நடவடிக்கை என்றும் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தனபாலன், மதுபானக் கடைக்கு வரும் நுகர்வோர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மதுபான வகையை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ஆகவே, அனைத்து மதுபான நிறுவனங்களின் மதுபான வகைகளும் டாஸ்மாக் கடைகளில் கிடைக்க வேண்டும். இந்த சூழலில் எல்லா மதுபான நிறுவனங்களிடமிருந்தும் பாரபட்சமில்லாத முறையில் மது பானங்களை கொள்முதல் செய்ய வேண்டும்.
மதுபான நிறுவனங்களிடமிருந்து மதுபானங்களை கொள்முதல் செய்வது தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் தகுந்த விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மனுதாரர் நிறுவனம் உற்பத்தி செய்யும் மதுபான வகைகளின் விற்பனைக்கு ஏற்ப, அந்த நிறுவனத்திடமிருந்து மதுபான வகைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.