Published : 03 Dec 2013 03:01 PM
Last Updated : 03 Dec 2013 03:01 PM

பத்திரிகையாளர்கள் கைதுக்கு கருணாநிதி கண்டனம்

திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் மீதான தாக்குதல், ஏற்காடு அதிமுக-திமுக மோதல், மின்வெட்டுப் பிரச்சினை, கெயில் எரிவாயுக் குழாய் விவகாரம், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

முதலாவதாக நேற்று (திங்கள் கிழமை) தனியார் தொலைக் காட்சியைச் சேர்ந்த செய்தியாளர்களை ஒரு குழுவினர் தாக்கியது குறித்தும் அந்த சம்பவத்தில் காவல் துறையினர் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 200 பேருக்கு மேல் பத்திரிகையாளர்களை போலீசார் கைது செய்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கருணாநிதி அந்தச் சம்பவத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.

ஏற்காடு தொகுதியில், அ.தி.மு.க. வினர் நடத்திய மோதல் காரணமாக தி.மு.க.-வைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பலியானது குறித்த கேள்விக்கு, அதற்குக் காரணம், அ.தி.மு.க. வா,வேறு யாராவதா என்று குற்றம் சாட்ட விரும்பவில்லை. இருப்பினும், தி.மு.க கூட்டம் நடைபெற்ற அதே இடத்திற்கு அ.தி.மு.க. வினர் ஊர்வலம் வர காவல் துறை அனுமதி கொடுத்த காரணத்தால் தான், இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் தி.மு.க.-வைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவர் மின்சாரம் தாக்கி கொல்லப்பட்டிருக்கிறார் என்றார்.

மேலும், இது காவல் துறையினரின் கவனக் குறைவா அல்லது இரண்டு நிகழ்ச்சிகளுக்கு ஒரே நேரத்தில் அனுமதி கொடுத்து அல்லது வழி விட்டு நடத்த அனுமதித்ததன் விளைவா? இதற்குக் காரணமாக போலீசார் இருந்ததால் ஒரு இளைஞனைத் திராவிட முன்னேற்றக் கழகம் பலி கொடுத்திருக்கிறது என தெரிவித்தார்.

மின்வெட்டு-கருணாநிதி கிண்டல்:

தமிழகம் முழுவதும் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ள மின்வெட்டு குறித்தும், சென்னையிலேயே அமலில் இருக்கும் அன்றாடம் 2 மணி நேரம் மின்வெட்டு குறித்த கேள்விக்கு கிண்டலாக "சந்தோஷம்!" என கூறினார்.

அது மட்டுமல்லாமல் மின் வெட்டு ஏற்படும் போதெல்லாம்,முதல்வர் ஜெயலலிதா அதற்கு தி.மு.க மீது பழி போடுவதும்; மத்திய அரசும், தி.மு.க-வும் சேர்ந்து சதி செய்வதாகச் சொல்லுவதும் ஜெயலலிதாவின் வாடிக்கை. தாங்கள் செய்கிற தவறை மறைக்க பிறர் மீது பழி போடுவது என்பது அவருக்கு இன்று நேற்றல்ல; என்றுமே வாடிக்கை, என்றார்.

"கெயில்" பிரச்சினைக்கு விளக்கம்:

"கெயில்" எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் பிரச்சினையில் இரு தரப்பினருடன் பேசி சுமூகமான முடிவெடுக்க வேண்டுமென்று தான் சொல்லியதற்க்குக் காரணம், நாட்டின் பொருளாதாரம் அல்லது விஞ்ஞான வளர்ச்சிக்காகசில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விவசாயத் துறையின் வளர்ச்சிக்காக இயந்திர மயம் என்ற பெயரால் சில காரியங்கள் நடக்கின்றன. அதேநேரத்தில் விவசாயத்திற்கு கேடு விளைவிக்காமல் இருக்க மற்ற துறையினரும், தொழில் துறையினரும் அக்கறை காட்ட வேண்டும் என்பதனாலேயே என தெளிவு படுத்தினார்.

திமுக விவாதம்:

மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை சென்றது பற்றி வருகின்ற நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் விவாதத்திக்க அனுமதிக்கப்படுமானால் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயமாக விவாதத்தில் பங்கேற்பார்கள் என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x