

சாகுபடி பரப்பு குறைந்து செவ்வாழைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது, ஒரு தார் விலை ரூ.1,000 முதல் ரூ.1,100 வரை விற்பதால் பொது மக்களும், வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வாழையில் பல ரகங்கள் இருந்தாலும், மலை வாழை, செவ்வாழை பழங்களை மக்கள் விரும்பி உண்பதால் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. செவ்வாழை யின் மணம், மருத்துவ குணம், சிவந்த அதன் தோல் மற்றும் சுவையின் காரணமாக ஆண்டு முழுவதும் அதற்கு சந்தைகளில் தனி வரவேற்பு உள்ளது. ஆனால், செவ்வாழை எல்லா இடங்களிலும் சிறப்பாக விளைவது இல்லை. கன்னியாகுமரி, திருச்சி, புதுக் கோட்டை, தஞ்சாவூர், கரூர், திண் டுக்கல், மதுரை உட்பட தமிழகத் தில் குறைவான நிலப்பகுதிகளில் மொத்தம் 5 ஆயிரம் ஏக்கரில் மட்டும் செவ்வாழை பயிரிடப்படுகிறது.
இந்த ரக வாழையை பலவித நோய்களும், பூச்சிகளும் எளிதில் தாக்குகின்றன. அதனால், சிறந்த உர நிர்வாகம், பயிர் பாதுகாப்பு, நீர் நிர்வாகம் செய்து விவசாயி கள் மிகுந்த சிரமப்பட்டே செவ் வாழையை விளைவிக்கின்றனர். ஆனாலும், கன்னியாகுமரி, கேரளம், தாண்டிக்குடி மலைப் பகுதியில் விளைகிற செவ்வாழைப் பழங்களைப் போல, மற்ற பகுதி களில் விளைவதில்லை. கடந்த சில நாட்களாக தமிழக சந்தைகளில் தட்டுப்பாடு காரணமாக செவ் வாழையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங் களில், கடந்த சில நாட்களாக ஒரு தார் ரூ.1,000 முதல் ரூ.1,100 வரை விற்பதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.
இதுகுறித்து வாழை வியா பாரி சுரேஷ்குமார் கூறியதாவது:
தமிழகத்தில், கடந்த சில மாதங் களாக விளைச்சல் இல்லாததால் செவ்வாழை மட்டுமல்லாது, மற்ற ரக வாழைகளின் வரத்தும் குறைந்து விலை கடுமையாக உயர்ந்துவிட்டது.
இந்த விலை உயர்வால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை. வாழை சாகுபடியில் விளைச்சல் அதிகமானாலும், குறைந்தாலும் விவசாயிகளுக்கு நஷ்டம்தான். அதிகமான மழை, வறட்சி, காற்று அடித்தாலும் வாழையில் பாதிப்புதான்.
தொடர்ந்து, கடந்த சில ஆண்டு களாகவே வாழை விவசாயிகள் நஷ்டமடைந்துதான் வருகின்றனர். அதனால், வாழை சாகுபடி பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. தட்டுப்பாடு காரணமாக செவ்வாழை அபூர்வமானாலும் ஆச்சரியப்படு வதற்கு இல்லை. இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத் துக்கு வாழை இறக்குமதி செய்யக் கூடிய நிலைதான் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாழைக்கு தனி வாரியம் அமைக்கப்படுமா?
தமிழர் கலாச்சாரப்படி, ‘வாழையடி வாழை’யாக என்று சொல்லித்தான் வாழ்த்துவது வழக்கம். தற்போது இந்தப் பழமொழிக்கு அர்த்தமே இல்லாமல் வாழை விவசாயம் அழிந்து வருகிறது. தமிழக அரசு தென்னைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வாழைக்கு கொடுப்பதில்லை. தென்னைக்கு தனி வாரியம் அமைத்திருப்பதுபோல் வாழைக்கும் அமைக்க வேண்டும். வாழைப்பழங்கள் உண்பதற்கும், சமையலுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. வாழையில் இருந்து மதிப்புக் கூட்டு பொருட்கள் தயார் செய்ய அரசு முயற்சி எடுக்கவில்லை என்கிறார் வாழை வியாபாரி சுரேஷ்குமார்.