Published : 15 Feb 2017 08:01 AM
Last Updated : 15 Feb 2017 08:01 AM

தமிழக அரசியலில் ஒரே நாளில் அடுத்தடுத்து பரபரப்பு திருப்பங்கள்

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்ததையடுத்து, தமிழக அரசியலில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து பரபரப்பு திருப்பங்கள் நிகழ்ந்தன.

அதிமுகவில் சசிகலா அணியில் இருந்து எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் ஓபிஎஸ் அணிக்கு செல்லலாம் என்ற பரபரப்புக்கு இடையில் நேற்று முன்தினம் மாலை 3-வது நாளாக கூவத்தூர் சென்றார் சசிகலா. அங்கு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய அவர் அங்கேயே இரவு தங்கினார்.

இதற்கிடையில், சொத்துக் குவிப்பு வழக்கில் 14-ம் தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்ற தகவலும் கிடைத்ததால், அடுத்தகட்ட நடவடிக்கைகளை சசிகலா தரப்பினர் தொடங்கினர்.

நேற்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியானது. சசிகலா முதல்வர் ஆகமுடியாது என்று தெரிந்ததும், அடுத்தது யார் என்ற ஆலோசனை தொடங்கியது. முதலில் செங்கோட்டையன் பெயர் அடிபட்டாலும், இறுதியில் எடப் பாடி பழனிசாமி என முடிவெடுக் கப்பட்டது.

அதே நேரம், முதல்வர் ஓபிஎஸ் தரப்பும் பரபரப்பானது. புதிதாகச் சேர்ந்த எம்எல்ஏக்கள் செம்மலை, சின்னராஜ் மற்றும் ஏற்கெனவே வந்த நிர்வாகிகளுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். கசப்புகளை மறந்து இணைந்து செயல்படுவோம் என அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அவர் வேண்டுகோளும் விடுத்தார்.

இதற்கிடையில், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை செங்கோட்டையன் 12.30 மணி அளவில் காட்டினார். பிறகு, எடப் பாடி பழனிசாமியும் செய்தியாளர் களை சந்தித்து, ‘‘தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைப்பதற்காக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கையெழுத்திட்ட உரிமை கோரும் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம்’’ என்றார்.

இதற்கிடையில், முதல்வர் ஓபிஎஸ் ஆதரவு அமைச்சரான பாண்டியராஜன் கூவத்தூரில் உள்ள எம்எல்ஏக்களை அழைத்து வரச் சென்றார். அவர் கோவளத் திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். நீண்ட நேரமாக காத்திருந்தும் செல்ல முடியாததால், அவர் அங்கிருந்து திரும்பினார்.

அதேநேரம், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கூவத்தூரில் எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகளுடன் சசிகலா தொடர்ந்து ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில், கூவத்தூரில் அசாதாரண சூழல் நிலவுவதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலட்சுமி அறிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரம் ஒதுக்கினார். அதன்படி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், சரோஜா, ராஜலட்சுமி மற்றும் செங்கோட்டையன், பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மூத்த நிர்வாகி தளவாய்சுந்தரம், சசிகலாவின் உறவினர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 13 பேர் ஆளுநரை மாலை 5.30 மணிக்கு சந்தித்தனர். 10 நிமிடத்தில் அங்கிருந்து கூவத்தூர் புறப்பட்டனர்.

ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓபிஎஸ் ஆதரவு எம்.பி. யான மைத்ரேயன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் 7 மணிக்கு சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது.

இதற்கிடையில், தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, நேற்று இரவு டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் ஆகியோரை அழைத்த ஆளுநர், சட்டம் ஒழுங்கு தொடர்பாக கேட்டறிந்தார்.

இவ்வாறாக ஒரே நாளில் பல பரபரப்புகளை தமிழக அரசியல் சந்தித்தது. ஆளுநர் முடிவு வரும் வரை இந்த பரபரப்பு தொடரக்கூடும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x