

வான், ரயில், சாலை வழித்தடங்கள் மூலம் திருச்சியை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்கள் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளன. இதில் உள்ள தடைகளை நீக்கி, செயல்பாட்டுக்கு கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாநிலத்தின் மையப் பகுதியில் இருப்பதால் திருச்சி மாநகரத்திலிருந்து பிற நகரங்களுக்கு, குறுகிய நேரத்தில் சென்றுவிட முடியும். இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக விமானம், ரயில், பேருந்து ஆகிய 3 வழித்தடங்களிலும் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க வேண்டும் என திருச்சி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
திருச்சியில் சாலை போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கவும், சென்னை, மதுரை, திண்டுக்கல், கோவை, காரைக்குடி, தஞ்சை ஆகிய வழித்தடங்களை இணைக்கும் வகையில் அரைவட்டச் சுற்றுச்சாலை அமைக்கும் பணிகளும் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. இதுவரை முடியவில்லை.
இதுகுறித்து நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் சேகரன் கூறும்போது, “ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க தேவதானம், பஞ்சப்பூர், பிராட்டியூர், மன்னார்புரம் ராணுவ மைதானம் என பல இடங்களைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் ஒரு இடத்தில்கூட இதற்கானப் பணிகளை தொடங்கவில்லை. இதனால், பயணிகள் கடும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். திட்டம் நிறைவேறாததற்கு அரசியல்வாதிகளின் தலையீடு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, முதல்வர் தலையிட்டு இதற்குத் தீர்வு காண வேண்டும். அதேபோல, அரைவட்டச் சுற்றுச்சாலைப் பணிகளையும் முடிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
விமான ஓடுதளம் விரிவு...
வான்வழி போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் தமிழகத்தின் 2-வது பெரிய சர்வதேச விமானநிலையமாக திருச்சி விளங்குகிறது. இங்கிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆண்டுக்கு சுமார் 11.5 லட்சம் பயணிகள் சென்று வருகின்றனர். எனவே, பெரிய ரக விமானங்களை இயக்கும் வகையில், விமானநிலையத்தின் ஓடுதளத்தை 8,136 அடியிருந்து சுமார் 12,000 அடியாக உயர்த்த முடிவு செய்த மத்திய அரசு, அதற்கான நிலங்களை கையகப்படுத்தி தருமாறு கடந்த 10.1.2010-ம் ஆண்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால் இதுவரை அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர் எச்.உபைதுல்லா கூறும்போது, “மத்திய அரசு கேட்டுக்கொண்ட பிறகும், கடந்த ஆறரை ஆண்டுகளாக தமிழக அரசு இதற்கான பணிகளை வேகப்படுத்தவில்லை. இதனால், விமானநிலையத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். அதேபோல, திருச்சியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானசேவை அளிக்க பல்வேறு விமான நிறுவனங்கள் தயாராக உள்ளன. ஆனால், மத்திய அரசு அதற்கான அனுமதியைத் தர மறுக்கிறது. எனவே, முதல்வர் இதுகுறித்து பிரதமரிடமும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடமும் வலியுறுத்தி, உரிய அனுமதியைப் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.
புதிய ரயில் சேவை கிடைக்குமா?
திருச்சி ரயில் நிலையத்திலிருந்து, பிற நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பெரும்பாலான விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. சில ரயில்கள் வேறு நகரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம் கூறும்போது, “மைசூர்- திருச்சி ரயில் மயிலாடுதுறை வரையிலும், எர்ணாகுளம்-திருச்சி ரயில் காரைக்கால் வரையிலும், மங்களூரு-திருச்சி ரயில் சென்னை வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதேபோல, திருச்சி-திருப்பதி, திருச்சி-புனே, விருத்தாச்சலம் வழி சென்ற திருச்சி-பெங்களூரு உள்ளிட்ட ரயில்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இவற்றுக்கு பதிலாக திருச்சியிலிருந்து அதே வழித்தடத்தில் மீண்டும் ரயில்களை இயக்க வேண்டும். மேலும், இங்கிருந்து கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு பகல்நேர இன்டர்சிட்டி ரயில்களும், சென்னைக்கு அதிகளவிலான விரைவு ரயில்களும், மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு புதிய ரயில் சேவையும் அளிக்க வேண்டும் என பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நிறைவேற்றவில்லை. எனவே, இந்த கோரிக்கைகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்” என்றார்.