

பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில், குப்பைகளில் கொட்டப்படும் பாலிதீன் கழிவுகளை உண்பதால், கால்நடைகள் குடல் மற்றும் இரைப்பைகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நகரில் 40 மைக்ரானுக்கு குறை வான பாலிதீன் பை விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் உள்ள காய்கறி, இறைச்சி விற்பனைக் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டி பழக்கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அவற்றை பெற்றுச்செல்லும் பொது மக்கள் பாலிதீன் பைகளை குப்பைத் தொட்டிகளில் வீசிச் செல்கின்றனர். தற்போது வறட்சியால் நகர் பகுதி தெருக்களில் புற்கள், செடிகள் இல்லாத நிலையில், தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகள் குப்பைத் தொட்டியில் கிடக்கும் பாலிதீன் பைகளை உணவுக் கழிவுகளுடன் சேர்த்து சாப்பிட்டு, குடல் மற்றும் இரைப்பை பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.
இதனைத் தடுக்க நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் 40 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் பைகள் உபயோகத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டுமென சமூக ஆர் வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.