

மன்னார்குடி அருகே உள்ள, 10 ஆயிரம் ஏக்கருக்கு பாசன வசதியை அளிக்கும் வடுவூர் ஏரி தூர்வாரப்பட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் ஏரி மிகப்பெரியதாக உள்ளது. குடிநீர் தேவைக்காகவும், பாசனத்துக்காவும் சோழர் காலத்தில் இந்த ஏரி அமைக்கப்பட்டது. தற்போது, இந்த ஏரி 316 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. இந்த ஏரியில், 38.98 மில்லியன் கனஅடி நீரைத் தேக்கி வைக்க முடியும்.
இந்த ஏரிக்கு, காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்போது கண்ணனாறு மூலமும், மழைக்காலங்களில் மழைநீர் வடிகால்கள் வழியாகவும் தண்ணீர் வருகிறது. இந்த ஏரியின் மூலம் வடுவூர், தென்பாதி, வடபாதி, மேல்பாதி, சாத்தனூர், எடமேலையூர், எடகீழையூர், கட்டக்குடி, கருவாக்குறிச்சி, பேரையூர் ஆகிய கிராமங்களில் 1,336 ஏக்கர் நேரடியாகவும், 9,200 ஏக்கர் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஏரியில் ஆண்டுதோறும் வெளிநாடுகளைச் சேர்ந்த பறவைகள், மழைக்காலங்களில் அதிகளவில் இங்கு வலசை வருவதால் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, ஏரியின் பராமரிப்பை தமிழக வனத் துறை ஏற்றது.
மழைக்காலத்தில் முழு அளவில் தண்ணீர் இருக்கும் இந்த ஏரியில், கோடைக்காலங்களில் தண்ணீர் வற்றி ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறிவிடுகிறது.
ஏரியில் தண்ணீர் இல்லாததால் வடுவூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் நாளுக்கு நாள் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், இந்த ஏரியை முழுமையாகத் தூர் வார வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, வடுவூர் ஏரி பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் ஆர்.தமிழரசனிடம் கேட்டபோது, “வடுவூர் ஏரிக்கு தண்ணீர் விடும், பாசனத்துக்காக வெளியேற்றும் பொறுப்பு பொதுப்பணித் துறைக்கு உள்ளது. கடந்த சில ஆண்டுகள் வரை பொதுப்பணித் துறையின் பராமரிப்பில்தான் ஏரி இருந்தது.
பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதும் ஏரி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியை தூர் வார வேண்டும் என்றால் வனத் துறையின் பங்களிப்பும் அவசியம்.
ஏரியின் தண்ணீர் சேமிக்கும் கொள்ளளவு குறைந்து வருவதால், தொலைநோக்குத் திட்டத்துடன் தூர் வார முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.2.5 கோடிக்கு தூர் வார நிதி ஆதாரம் கேட்டு ஆசிய வளர்ச்சி வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்ததும், அடுத்த ஆண்டு கோடைக்காலத்தில் ஏரி தூர் வாரப்படும்” என்றார்.