Published : 17 Oct 2013 02:57 PM
Last Updated : 17 Oct 2013 02:57 PM

தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: கருணாநிதி

'ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்து வரும் ஜெயலலிதாவுக்கு தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்' என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

அறிஞர் அண்ணா அறிவித்த சேது சமுத்திர திட்டத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா தடைபோடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் பதவிக்கு உங்கள் ஆதரவு நரேந்திர மோடிக்கு உண்டா என்று யாரோ கேட்டபோது அந்தப் பதவிக்கு தன் பெயரை அல்லவா முன் மொழிய வேண்டும் என்று நினைத்தவர் ஜெயலலிதா என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவர் தான் இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தன்னுடைய கட்சியின் தொண்டர்களைத் தயார்படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அவர்களை உசுப்பி விட்டு வேலை வாங்குவது என்றால், அதற்கு முதல் பலியாக என்னைத் தாக்கி தொண்டர்களைத் தூண்டிவிட வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டு புறப்பட்டிருக்கிறார்.

தேர்தல் வருகிறது என்றாலே அம்மாவுக்கு திடீரென்று ஞானோதயங்கள் எல்லாம் பிறக்கும். காயிதே மில்லத் நினைவிடத்தில் மலராடை போர்த்த வேண்டும் என்ற எண்ணம்கூட தேர்தல் வரும்போதுதான் அம்மாவுக்கு ஏற்படும். எஞ்சியுள்ள நாட்களில் காயிதேமில்லத் நினைவிடம் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாது. அவ்வளவு ஏன்? எம்.ஜி.ஆர். பற்றிய நினைவேகூட சிக்கலான வழக்கு, சிக்கலான தேர்தல் வந்தால்தான் அம்மையார் மூளையில் திடீரெனத் தோன்றும்.

அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக தீட்டிய திட்டங்களை, மத்திய அரசு நிறைவேற்றிட நினைத்தாலும் அதற்கு குறுக்கே நின்று அந்தத் திட்டத்தைக் குழி தோண்டிப் புதைப்பதிலே பலே கில்லாடியாக ஜெயலலிதா விளங்குகிறார்.

சேது சமுத்திரத் திட்டத்தை நூற்றாண்டு காலக் கனவாகத் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து அதை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும்போது அந்தத் திட்டத்திற்காக 'எழுச்சி நாள்' கொண்டாடுங்கள் என்று எந்த அண்ணா அறிவித்தாரோ, அந்தத் திட்டத்தையே மட்டம் தட்டி மறுப்புக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் அதற்குத் தடை கோரிய தாட்சாயணி தான் இந்த அம்மையார் என்பதை நாடு நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது.

சேதுத் திட்டம் என்பது வெறும் சில்லறைத் திட்டமல்ல; எதிர்காலத் தமிழகத்தை வாழ வைக்கக் கூடியதும், பல துறைமுகங்கள் உருவாகி, வாணிபத்தை நாடுகள் பலவற்றிலும் பெருக்கிடக் கூடியதுமான வளமார் திட்டம்.

வளமான பொருளாதாரத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் திட்டம். 'நீரின் வந்த நிமிர் பரிப் புரவியுங்காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் ஈழத்துணவும் காழகத் தாக்கமும்' என வரும் பட்டினப்பாலை பாடலை மீண்டும் நினைவுபடுத்தி; மாண்ட நம் புகழையெல்லாம், மறுமலர்ச்சிக்கு உரியதாக்கும் திட்டம். அந்தத் திட்டத்தைத் தான் நிறைவேற்ற வேண்டுமென்று அதற்காக

'எழுச்சி நாள்' கொண்டாடுங்கள் என்று தி.மு.க. தோழர்களையெல்லாம் பேரறிஞர் அண்ணா 1967-ம் ஆண்டு ஆட்சி அமைந்தவுடன் உசுப்பி விட்டார்.

அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு நடைபெற்ற அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவினை அடுத்துப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றிருந்தால் இந்நேரம் எத்தனையோ துறைமுக நகரங்கள் தமிழகத்தில் தோன்றியிருக்கும்.

இப்போதும் அந்தத் திட்டம் வந்து விடக் கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்திருப்பது யார்? அண்ணாவின் கனவையே நிறைவேற்ற முடியாது என்று நீதிமன்றத்திற்குச் சென்றிருப்பவர்கள் - அண்ணாவைப் பற்றிப் பேச அணுவளவும் அருகதை இல்லாதவர்கள் என்பதை நாட்டிலே உள்ள நல்லறிவாளர்கள் - நாடு வாழ வேண்டும் வளமாக வாழ வேண்டும், வலிமையான பொருளாதாரமும், வளமான வாணிபத் துறையும் பெற்று வையகத்தில் பெரும் புகழ் நாட்டிட வேண்டும் என்று கனவு காணுகிற நம்மைக் கயவர்கள் என்றும், துரோகிகள் என்றும், அண்ணாவின் கொள்கைகளுக்கு விரோதிகள் என்றும் பேசித் திரிபவர்கள் அறிக்கை விட்டு அங்கலாய்ப்பவர்கள் யார் என்று புரிகிறதா?

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து சர்வாதிகாரத்தைத் தர்பாரில் உட்கார வைத்திருப்பவர்களுக்கு அறவழியில், ஜனநாயகப் பாதையில் தமிழ் நாட்டு மக்கள் வாக்குச் சீட்டையே பயன்படுத்திப் பாடம் புகட்டி இவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீருவார்கள்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x