

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் – சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் பிரதிநிதிகள் குழு இடையே புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
4 நாள்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் 13 நீதிபதி பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக 10 வழக்கறிஞர்கள் உள்பட 12 பேர் கொண்ட பட்டியலை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில் அந்தப் பட்டியலில் தகுதியான வழக்கறிஞர்கள் இடம்பெறவில்லை என்று கூறி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் புதன் கிழமை பிற்பகல் நடைபெற்றது. சங்கத்தின் துணைத் தலைவர் கே.கினி மானுவல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தங்கள் கோரிக்கைகளுக்காக வியாழக்கிழமையும் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடர்வது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
போராட்டம் வாபஸ்
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று புதன் கிழமை காலை புதுடெல்லி புறப்பட்டுச் சென்றது.
இந்த பிரதிநிதிகள் குழுவில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
டெல்லியில் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபலை முதலில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் பற்றி வழக்கறிஞர்கள் பேசினர். அதன் பின்னர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, சி.நாகப்பன் ஆகியோருடன் வழக்கறிஞர் பிரதிநிதிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்புக்குப் பின் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை கைவிடுவதாக வழக்கறிஞர்கள் அறிவித்தனர்.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் கூறியதாவது:
இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்கப்படும் என்று இந்திய தலைமை நீதிபதி உறுதியளித்துள்ளார். எங்களின் கோரிக்கைகள் பற்றி உரிய வகையில் பரிசீலிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தலைமை நீதிபதி உறுதியளித் தபடி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் எங்கள் போராட்டங்களை கைவிடுவது என தீர்மானித்துள்ளோம் என்றார் பால் கனகராஜ்.