

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதுச்சேரியில் நேற்று ஏராளமான போராட்டங்கள் பல இடங்களில் நடைபெற்றன.
பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி கோரிக்கை பேரணி மேற்கொண்டனர். பொதுப்பணித் துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி பணி நீக்கப்பட்ட ஊழியர்கள் சாரம் அவ்வைத் திடலில் இருந்து சட்டப்பேரவை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு பல்வேறு வீதிகள் வழியாக சட்டப்பேரவை நோக்கி சென்றனர். அவர்களை தலைமை தபால் நிலையம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர் போராட்டம்
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கு 7 மாத ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வுகளை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடுத்தகட்டமாக 16 ம் தேதி புதுச்சேரி முழுவதும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வேலைநிறுத்தம் செய்து தர்ணாவில் ஈடுபட சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
ரோடியர்மில் முன் ஆர்ப்பாட்டம்
புதுவை ரோடியர் மில்லை திறந்து நடத்த வேண்டும், 2017 மார்ச் முதல்தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கி முழு ஊதியம் அளிக்க வேண்டும், அரசு வழங்கும் இலவச துணி ஆர்டரை ரோடியர் மில்லுக்கே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரோடியர் தொழிலாளர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில் மில் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மாநில தலைவலர் அபிஷேகம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவி, திருஞானமூர்த்தி, தேசிகன், கிருஷ்ணமூர்த்தி, ஈஸ்வர், பச்சையப்பன், ராஜேஷ், அரிதாஸ், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், ஆலையின் வரவு செலவு கணக்கை மத்திய தணிக்கை குழு ஆய்வு செய்ய வேண்டும், பிரெஞ்சு கலாச்சார கட்டிடங்களை பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்தியன் காபி ஹவுஸ் போராட்டம்
இந்தியன் காபி ஹவுஸ் நிர்வாகத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக புதுச்சேரி அரசும், கூட்டுறவுத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்வேலியில் வெளியாட்களை வைத்து கிளையை மூடச்செய்த ஊழியர் மற்றும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்.
கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு தேர்தலை நடத்த வேண்டும், ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும். கிளைகளை நவீனப்படுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், ஊழல் புரிந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
சிஐடியு செயலாளர் ராமச்சந்திரன், ஐஎன்டியுசி தலைவர் தமிழ்ச்செல்வன், டிஎம்எஸ் தலைவர் திருமுருகன் கூட்டாக தலைமை தாங்கினர். கூட்டு பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் டி.முருகன், ராஜாங்கம், சந்தானசாமி, பிரதீப்குமார், மரியசூசை உள்பட பலர் கலந்து கொண்டனர்.