

அதிமுக எம்எல்ஏக்கள் 130 பேரும் எங்கு உள்ளனர், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர், வி.கே.சசிகலா பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் இளவரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘குன்னம் தொகுதி எம்எல்ஏவான ஆர்.டி.ராமச்சந்திரன் கடந்த 8-ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற் றார். அதன்பிறகு அவரைக் காண வில்லை. அவர் உள்ளிட்ட அதிமுக வின் 130 எம்எல்ஏக்களும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு ஹோட்டலில் சட்டவிரோத மாக சிறை வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து காஞ்சி புரம் மாவட்டம் கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை. எனவே, ராமச் சந்திரன் உள்ளிட்ட 130 எம்எல்ஏக்களையும் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இதேபோல, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பெண் எம்எல்ஏ கீதாவைக் காணவில்லை என்று அவரது உறவினரான வழக்கறிஞர் ப்ரீத்தாவும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசா ரணை நேற்று நீதிபதிகள் சி.டி.செல்வம், டி.மதிவாணன் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நடந்த வாதம்:
மனுதாரர்களின் வழக்கறிஞர் கே.பாலு மற்றும் வழக்கறிஞர் ப்ரீத்தா:
எம்எல்ஏக்கள் அனைவரும் பாதுகாப்பாக, பத்திரமாக, சுதந்திர மாக சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் இருப்பதாக நீதிமன்றத் தில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜேந்திரன் நேற்று உறுதியான தகவலைத் தந்தார். அதை அப்போதே மறுத்தோம். இந்த நிலையில், 130 எம்எல்ஏக் களும் கூவத்தூர் அருகே சொகுசு ஹோட்டலில் தங்கவைக்கப் பட்டுள்ளதாக எல்லா முன்னணி நாளிதழ்களும் செய்தி வெளி யிட்டுள்ளன.
சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் பலர் சாப்பிட மறுத்து உண்ணா விரதம் இருந்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து செல் போன்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. செல் போன்களை செயலிழக்கச் செய் யும் ஜாமர் கருவியும் அங்கு பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவி யைப் பொருத்த உள் துறைச் செயலரிடம் முன்அனுமதி பெற வேண்டும். அப்படி எந்த அனு மதியும் அவர்கள் பெறவில்லை. வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாதபடி, டிவி பார்க் கக்கூட எம்எல்ஏக்கள் அனுமதிக் கப்படவில்லை. காஞ்சிபுரம் எஸ்பியை அங்கு அனுப்பி எம்எல்ஏக்களின் நிலை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
நீதிபதிகள்:
(அரசு வழக்கறி ஞரை நோக்கி) அனைத்து எம்எல்ஏக்களும் சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் சுதந்திரமாக தங்கியிருப்பதாக அரசு தரப்பில் நேற்று (பிப்.9) தெரிவிக்கப்பட்டது. ஆனால் எம்எல்ஏக்கள் அங்கு இல்லை. அப்படியென்றால் அதிமுக எம்எல்ஏக்கள் அனை வரும் இப்போது எங்குதான் உள்ளனர்?
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம்:
சேப் பாக்கம் விடுதியில் எம்எல்ஏக் கள் இருப்பதாக கூறப்பட்ட தகவல் தவறானது. அவர்கள் அனைவரும் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது. அப்படி ஏதாவது கூறினால் அதை ஊடகங் கள் பெரிதுபடுத்திவிடுகின்றன. எனவே, இதுகுறித்து பார்ட்டியிடம் கேட்டுத் தெரிவிக்கிறேன்.
நீதிபதிகள்:
என்னது, பார்ட்டி யிடம் கேட்டுச் சொல்கிறீர்களா? அவர்கள் அனைவரும் மக்கள் பிரதிநிதிகள். அரசு பொதுப்பதவி வகிப்பவர்கள். நீங்கள் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர். எம்எல்ஏக்களை காணவில்லை என வழக்கு தொடர்ந்தால் ஓர் அரசியல் கட்சியிடம் கேட்டுச் சொல்வதாக நீங்கள் எப்படி கூறலாம்?
அரசு வழக்கறிஞர்:
நான் பார்ட்டி என கட்சியைக் கூறவில்லை. இந்த வழக்கில் எதிர் மனுதாரர் களாக சேர்க்கப்பட்டுள்ள டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள் ளிட்டோரைத்தான் குறிப்பிட் டேன்.
இவ்வாறு வாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:
அதிமுக எம்எல்ஏக்கள் சேப் பாக்கம் விடுதியில் இல்லை என்று அரசு வழக்கறிஞர் கூறியதை பதிவு செய்துகொள்கிறோம். அவர்கள் அனைவரும் எங்கு உள்ளனர், அவர்களது நிலை என்ன என்பது குறித்து அரசு தரப்பிடம் கேட்டு அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சாப்பிட மறுப்பு
20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக் கள் சாப்பிட மறுத்து உண்ணா விரதம் இருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்தார். அது உண்மை என்றால், சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் உண்மை நிலை என்ன என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது. இதுதொடர்பாக தமிழக டிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையர், வி.கே.சசிகலா உள்ளிட்டோர் வரும் 13-ம் தேதிக்குள் (திங்கள்கிழமை) பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி கள், விசாரணையை 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
எம்எல்ஏக்கள் பேட்டி
இதற்கிடையில், ‘காண வில்லை’ என்று கூறப்பட்ட ராமச்சந்திரன், கீதா உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று மாலை அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் சுதந்திரமாக, எங்கள் சுயவிருப்பப்படிதான் சக எம்எல்ஏக்களுடன் தங்கியுள் ளோம். எங்களை யாரும் அடைத்து வைக்கவில்லை. எங் களைக் காணவில்லை என வழக்கு தொடர்ந்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப் போம்’’ என்று கூறினர்.