

'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, மதுரை நேற்று இடம் பிடித்துள்ளது. இதனால், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1000 கோடி வரையில் உலகத்தரமான கட்டமைப்பு வசதிகள் மதுரைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக ‘100 ஸ்மார்ட் சிட்டி’க்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டு, இந்த திட்டத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்நகரங்களில் உலகத்தரத்துக்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக நாடு முழுவதும் இருந்து 33 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் மதுரையை சேர்ப்பதற்கான மதிப்பீடுகளில் குறைவான புள்ளிகள் பெற்றதால், முதல் பட்டியலில் மதுரைக்கு இடம் கிடைக்கவில்லை. அடுத்து வெளியான இரண்டாவது பட்டியலிலும் மதுரைக்கு ஏமாற்றமே கிடைத்தது. சாலை, குடிநீர், போக்குவரத்து, கால்வாய் வசதி, சுற்றுச்சூழல், சுகாதாரப் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் கடந்த காலத்தில் முக்கியத்துவம் கொடுக்காததே, ஸ்மார்ட் சிட்டி பட்டி யலில் மதுரை இடம் பெறாததற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, மதுரையை ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம் பெற வைப்பதற்கான நடவடிக் கைகள், மாநகராட்சி மூலம் மூலம் மேற்கொள்ளப்பபட்டன. இதை யடுத்து, கடந்த ஏப். 16 முதல் 30 வரை மதுரையில் புராதன சின்னங்கள் உள்ள
பகுதிகளில் 15 நாட்கள் தூய்மைப் பணிகள் நடந்தன. அடுத்ததாக மே 1 முதல் 16 வரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு தொழிற்கூடங்களில் துப்புரவு பணிகள் நடந்தன. இப்பணியில் மாநகராட்சியின் துப்புரவு ஊழியர் களுடன் தனியார் நிறுவன ஊழியர்களும் பொதுமக்களும் கைகோர்த்தனர். இந்நிலையில் 3-வது கட்ட ஸ்மார்ட் சிட்டி பட்டியலை நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று வெளியிட்டார். இந்த பட்டியலில் வேலூர், மதுரை, சேலம், தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 27 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ரூ.66,833 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை இடம் பெற்றுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளில் மதுரையில் மத்திய அரசு நிதி ரூ.500 கோடி, மாநில அரசு நிதி ரூ.500 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், மதுரைக்கு உலகத்தரத்திலான கட்டமைப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளால் பொதுமக்கள், தொழில் முனைவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதற்கட்டமாக, மீனாட்சி கோயில், சுற்றுப்பகுதியில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைத்தல், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அழகாக்குதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற் கொள்ளப்படும். இதற்காக விரைவில் திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் மதுரை இடம் பெற்றதை தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் ஆணை யர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினர்.