மதுரையில் ரவுடிகள் பெட்ரோல் குண்டுவீச்சில் ஒருவர் பலி

மதுரையில் ரவுடிகள் பெட்ரோல் குண்டுவீச்சில் ஒருவர் பலி
Updated on
1 min read

கடந்த 2012 அக்டோபர் 30-ல் மதுரை அருகே பெட்ரொல் குண்டு வீசி 7 பேரை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த நபர்கள் மீது மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

மதுரை தெப்பக்குளம் பகுதியில்,கார் மீது பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார், 4 பேர் காயமடைந்தனர்.

பலியானவர் சிவகங்கை மாவட்டம் பாட்டம் பகுதியைச் சேர்ந்த முத்துவிஜயன் (22) என அடையாளம் தெரிந்துள்ளது. காயமடைந்த சோனையா, விக்ணேஷ் மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தியன்று, பசும்பொன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு மதுரை திரும்பிய ஒரு வாகனத்தின் மீது மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டு வீசியது. இதில் காரில் வந்தவர்களில் 7 பேர் இறந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்கள் கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகினர்.

இந்நிலையில், அனுப்பானடியை சேர்ந்த விக்னேஷ், சோனையா உள்பட ஜாமீனில் வெளியான 10 பேரும் இன்று காலை நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட காரில் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சிலர் இரு சக்கர வாகனத்திலும் சென்றனர். அப்போது அவர்களைக் குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதில் இருசக்கர வாகனம் ஒன்று முற்றிலும் சேதமடைந்தது. காரில் இருந்த இளைஞர் முத்து விஜயனை மர்ம கும்பல் வெட்டிக் கொன்றது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in