

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார்(29). இவர் நேற்று காலை கே.கே.சத்திரம் அருகே உள்ள தும்பிக்குளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். உடன் மனைவி காவம்மாள்(27), மாமியார் தேசம்மாள்(43) ஆகியோரையும் அழைத்துக்கொண்டு ஒரே வண்டியில் மூவரும் சென்றனர்.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வேகமாக கார் ஒன்று வந்தது. காரை திருவள்ளூரைச் சேர்ந்த பாஜக பிரமுகரான ரமேஷ் (44) ஓட்டி வந்தார். ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக ஆந்திர மாநிலம் புத்தூருக்கு அவர் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் மேதினபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் முட்புதரில் சிக்கி நின்றது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தேசம்மாள் அதே இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் உயிருக்குப் போராடினர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திருந்தணி போலீஸார் குமாரையும் காவம்மாளையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்.
இதனிடையே விபத்து நடந்த பகுதியில் திரண்ட பொதுமக்களும் அருகே இருந்த திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் விபத்தை ஏற்படுத்திய ரமேஷை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவர் போதையில் கார் ஓட்டி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அவரை கைது செய்த திருத்தணி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.