

சென்னை மாநிலக் கல்லூரிக்கு கூடுதல் மாணவர் விடுதி கட்ட ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
மாநிலக் கல்லூரியின் 175-வது ஆண்டு கொண்டாட்ட நிறைவு விழா, அக்கல்லூரி விளையாட்டு திடலில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள 175-வது ஆண்டு நினைவு வளைவுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது:
மாநிலக் கல்லூரி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி. இது எத்தனையோ அறிவியல் மேதைகளையும், அறிஞர்களையும் உருவாக்கியுள்ளது. ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில்தான் உருவாக்கப்படுகிறது. ஏட்டுக் கல்வி மட்டும் ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயித்துவிடாது. அவர் கற்கும் சமுதாயக் கல்விதான் அவரை முழு மனிதனாக்கும். ஒவ்வொரு கல்வி நிறுவனமும், கணினி யுகத்தின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலும், அறிவுக் கூர்மையும் கொண்ட கல்வியைத்தான் வழங்க வேண்டும். கல்வி, வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும். இக்கல்லூரியில் சாதனையாளர்களை நினைவு கூரும் நாம், அவர்களை உருவாக்கிய பேராசிரியர்களையும் போற்றி வணங்க வேண்டும்.
இந்த கல்லூரியில் மாணவர்கள் தங்கியுள்ள விக்டோரியா விடுதி, 117 ஆண்டுகள் வரலாற்று சிறப்புகளைக் கொண்டது. இந்த கல்லூரி சார்பில் கூடுதலாக ஒரு புதிய விடுதி கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாணவர்களின் தேவையை கருத்தில்கொண்டு, உடனடியாக விடுதி கட்டுவதற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இது தொடர்பாக கல்லூரி முதல்வர் த.பிரம்மானந்த பெருமாள் கூறும்போது, ‘‘தற்போது விக்டோரியா மாணவர் விடுதியில் சில இடங்களில் உறுதித் தன்மை குறைவாக உள்ளது. அதனால் கூடுதலாக மாணவர் விடுதி கட்டிடம் வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டிருந்தோம். அவரும் நிதி ஒதுக்கியுள்ளார். அந்த விடுதி, 500 மாணவர்கள் தங்கும் வகையில் அமையும்” என்றார்.
விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், முதன்மைச் செயலர் சுனீல் பாலீவால், கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா, மக் களவை உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.