

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆளுநருடனான மோதல் போக்கை கைவிடுவது நல்லது என்று பாஜக தேசிய செயலாளார் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறுகையில், ''யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநருக்கு முழுமையான அதிகாரம் உள்ளது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநருக்கு எதிராக உள்ள பிற கட்சிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரண்பேடியுடனான மோதல் போக்கை கைவிட்டு நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இல்லையென்றால் டெல்லியில் கேஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட நிலை புதுச்சேரியில் நாராயணசாமிக்கு ஏற்படும். டெல்லி தேர்தல் முடிவின் அடிப்படையை வைத்தே இதை குறிப்பிடுகிறேன்'' என்றார்.
சமீபத்தில் நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அக்கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.