

மா விளைச்சல் அமோகமாய் இருக்கும் என்று ஹெலிகாப்டரில் தெளிக்கப்பட்ட ரசாயன மருந்து எண்டோ சல்பான். இந்த நச்சு மருந்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் கேரளத்தின் முதலைமடையும் ஒன்று.
பொள்ளாச்சி, ஆனைமலைக்கு மேற்கே உள்ள இந்த முதலைமடை பஞ்சாயத்துக்கு உள்ளடங்கிய சம்மனாம்பதி, அண்ணாநகர், மேற்கரை, கொட்டபள்ளம், மோச்சக்குறடு என 10க்கும் மேற்பட்ட கிராமங்கள், தற்போது கல்குவாரிகளால் அலறிக் கொண்டிருக்கின்றன.
பாலக்காடு மாவட்ட ஆட்சியர் ராமச்சந்திரன், அதிகாரிகளுடன், நேரடி விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளார். அவர் வந்து சென்று, எந்த முடிவும் எடுக்காததால், இங்குள்ள ஆதிவாசி சம்ரக்ஷன சங்கம், பல்வேறு விவசாய அமைப்புகள் கண்டனப் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், ஆட்சியர் அலுவலக முற்றுகை என, பலகட்டப் போராட்டங்களை அறிவித்துள்ளன.
இதுகுறித்து போராட்டக் குழுத் தலைவர் மாரியப்பன் கூறியது: பக்கத்தில் உள்ள சுருளியாறு அணைதான் நிலத்தடி நீருக்கான ஆதாரம். அதை வைத்துதான் விவசாயமும், குடிதண்ணீர் தேவையும், காலம்காலமாக பூர்த்தியாகி வருகிறது. அப்படியிருக்கையில், சில கிலோ மீட்டர் தொலைவுக்குள், அருகருகே 5 கல்குவாரிகள், தலா 100 ஏக்கர் முதல் 200 ஏக்கர் வரையிலான பரப்பில் இயங்கி வருகின்றன.
இவற்றில் நக்சல் கிரஸ்ஸர், எம்.சேண்ட், மெட்டல் என்று தயார் செய்கின்றனர். நூற்றுக்கணக்கான போர்வெல்களில், ஆயிரக்கணக்கான அடி ஆழத்திற்கு துளைபோட்டு நீர் உறிஞ்சப்படுகிறது.
கல்குவாரிகள் வெளியிடும் தூசு, கற்களின் மாசு காரணமாக ஆஸ்துமா, டி.பி. போன்ற நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் பாதாளத்துக்குப் போய், விவசாயமும் பாழாகி விட்டது. கிரஸ்ஸர் மண் பரவி, மாம்பழங்கள் நிறம்மாறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. முதலைமடையில் உள்ள 3000க்கும் மேற்பட்ட வீடுகள், இந்த குவாரிகளில் வைக்கப்படும் வெடியால் விரிசல் அடைந்துள்ளன.
இங்கிருந்து 1 கி.மீ. தூரம் உள்ள சுருளியாறு அணை கூட இதனால் பாழாகுது.
இந்த குவாரிகளில் சில, அரசு அனுமதியில்லாமல்தான் இயங்கி வருகிறது என்று கூறப்படுகிறது. புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இக்குவாரி களை அகற்றாத வரைக்கும் போராட்டம் ஓயாது என்றார்.