Published : 19 Jun 2017 01:28 PM
Last Updated : 19 Jun 2017 01:28 PM

ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா விவகாரம்; சட்டப்பேரவையில் அமளி: திமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் இன்று (திங்கட்கிழமை) கேள்வி நேரம் முடிந்தவுடன், திமுக உறுப்பினர்கள் ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் தேர்தல் ஆணையம் பரிந்துரை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், "ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் போட்டிருக்கும் உத்திரவு பற்றி நேற்றும், இன்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. எனவே, இதுகுறித்து சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தினைப் பயன்படுத்தி (Zero Hour) நான் கேள்வி எழுப்பினேன்.

முக்கியமாக, நேற்றைய தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கேட்டபோது, ’இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது, எனது கவனத்துக்கு இதுவரை வரவில்லை’, என்று சொல்லியிருக்கிறார். ஆனால், தேர்தல் ஆணையம் 18-04-2017 அன்றே இந்த அறிக்கையை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பே இது வந்திருக்கிறது. ஆனால், இதுபற்றி முதலமைச்சர், ’எனக்குத் தெரியாது’, என்று முதலமைச்சர் பதில் சொல்கிறார் என்றால், இது ஒரு செயலற்ற ஆட்சி என்பது இதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. அதற்கு இதைவிட வேறு சாட்சியை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட 3 ஆணையர்கள் கொண்ட முழு கமிஷன் (Full Commission) உத்திரவின்படி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 22 இடங்களில் சோதனை நடந்தது. அந்தச் சோதனையில், ரொக்கமாக 5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் எந்தெந்த மந்திரிகள், எத்தனை கோடிகளை கொடுத்தார்கள் என்ற புள்ளி விவரம், 89 கோடி ரூபாய்க்கான ஆதாரங்கள் கொண்ட பட்டியல் ஆகியவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து, 09 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது, என்ற செய்தி வந்தது.

இந்த ரெய்டின் அடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் வேலுமணி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள், மாண்புமிகு அமைச்சர் தங்கமணி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், டிடிவி.தினகரன் ஆகியோர் பெயர்கள் எல்லாம் இடம்பெற்று இருக்கிறது.

அதுமட்டுமல்ல, அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் – 117, பிரிவு பி-யின் கீழ் வழக்குப்பதிவு செய்ய 18-04-2017 அன்று மாநில தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிக்கு உத்திரவிட்டு இருக்கிறது. அந்த உத்திரவுடன் வருமான வரித்துறையின் ரெய்டு பற்றி 34 பக்க அறிக்கையும் இணைக்கப்பட்டு, தலைமைச் செயலாளர் அவர்களுக்கும் நகல் அனுப்பப்பட்டு இருக்கிறது.

அதன்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்ற கேள்வியை தான் நான் அவையில் இன்று கேட்டேன். இதற்கு முதலமைச்சர் நீண்ட விளக்கம் சொல்வார் என்று நாங்கள் ஆவலோடு காத்திருந்தோம். ஆனால், அவர் எழுந்து, “புலன் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டு இருக்கிறது”, என்று ஒரே ஒரு வரியில் பதில் சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டார்.

நான் கேட்கின்ற கேள்வி, யார் யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது? என்ன வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது? எப்போது இந்த உத்திரவு வந்தது? எந்த தேதியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது? இவற்றுக்கான விளக்கங்களை முதலமைச்சர் சட்டமன்றத்தில் சொல்லவில்லை. முதலமைச்சரின் பதில் எங்களுக்கு திருப்தியை தரவில்லை. அதுமட்டுமல்ல, இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது யாரென்று கேட்டால் காவல்துறை தான். அந்தக் காவல்துறை யாருடைய கையில் இருக்கிறது என்றால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கையில் உள்ளது. ஆனால், வழக்கில் A1 – முதல் குற்றவாளி யாரென்றால் அதே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் இருக்கிறார். எனவே, அவரைப்பற்றி அவரே விசாரிக்க முடியுமா? அவர் மட்டுமல்ல, அமைச்சர்கள் 9 பேரும் இதில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட நேரத்தில், இந்த நாட்டின் மிக முக்கியமான இடத்தில் உள்ள உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகிய மிகப்பெரிய சக்தி வாய்ந்த இரண்டு அமைப்புகள். அப்படிப்பட்ட தேர்தல் ஆணையமே வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்திரவு போட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தில் பல அமைச்சர்கள் மீது வழக்குகள் போட உத்திரவிடப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கில், வழக்குப்பதிவுச் செய்ய உத்திரவிடப்பட்டு உள்ளது. இப்படி பல அமைச்சர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது.

இதே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டின் போது, அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்த 3 அமைச்சர்கள் ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம் போன்ற அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறது. இப்போது முதலமைச்சர் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்திரவிடப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளை எல்லாம் முறையாக விசாரிக்க வேண்டும் என்றால், காவல்துறையை கையில் வைத்துக் கொண்டுள்ள முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் பொறுப்பில் இருந்தால், நியாயமான விசாரணை நடைபெறாது.

ஆகவே, அவர்கள் அனைவரும் உண்மையாகவே குற்றவாளிகள் இல்லை என்று நிரூபிக்க வேண்டுமெனில், தெம்பு இருந்தால், திராணி இருந்தால் என்ன செய்ய வேண்டுமென்றால், முதலமைச்சரும் பதவியில் இருந்து விலக வேண்டும், சம்பந்தப்பட்ட 9 அமைச்சர்களும் பதவியில் இருந்து விலக வேண்டும். இந்தக் கோரிக்கையைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நான் சட்டமன்றத்தில் எடுத்து வைத்தேன். அந்த வார்த்தைகளை எல்லாம் அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கி விட்டார். அதுமட்டுமல்ல, ஒரே ஒரு வரியில் முதலமைச்சர் சொன்ன விளக்கமும் எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை.

ஒரு கபட நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இதனை எல்லாம் கண்டிக்கின்ற வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்" என்றார்.

இதனைத் தொடர்ந்து, மனுதாரர் தான் அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர, தேர்தல் ஆணையம் அவர்கள் பெயர்களை குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்யவில்லை என்று சபாநாயகர் விளக்கம் அளித்து இருக்கிறாரே? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஸ்டாலின், "தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற அந்த உத்திரவை யாருக்கு அனுப்பி வைத்திருக்கிறது? தலைமைச் செயலாளர் இதுபற்றி ஏன் முறையாக வெளியில் இதுவரை சொல்லவில்லை? முதலமைச்சருடன் அவர் ஏன் கலந்து பேசவில்லை? ஒருவேளை இதையெல்லாம் மூடி மறைக்கும் முயற்சி நடக்கிறதா? மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி இதில் கூட்டு சேர்ந்து மூடி மறைக்கும் வேலைகளில் ஈடுபட்டாரா? ஆகிய இந்த கேள்விகளை தான் நாங்கள் முன் வைக்கிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x