

ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை காரில் கடத்திச் சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் குற்றங்களை தடுக்க வாகன சோதனையை தீவிரப்படுத்தும்படி காவல் ஆணையர் கரன் சின்கா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை 3 மணிக்கு அமைந்தகரை போலீஸார், அமைந்தகரை புல்லா அவென்யூவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் ஒன்றை மறித்தனர். அதில், இருந்த 2 பேரிடமும் விசாரித்தனர். அப்போது, இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து காரை சோதனையிட்டனர். காரில் இருந்த கைப்பையை திறந்து பார்த்தபோது சில மாதங்களுக்கு முன்னர் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தனர்.
மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் சேலம் மாவட்டம் கூடமலையை சேர்ந்த ரமேஷ் (30), பொள்ளாச்சி கோலார்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (32) என்பது தெரியவந்தது.
இரண்டு பேரிடமும் அண்ணா நகர் துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் அமைந்தகரையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் வில்லிவாக்கத்தில் உள்ள மற்றொரு தொழில் அதிபருக்கு பணத்தை கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்துள்ளார்.
கொடுத்தனுப்பியது யார்? பணத்தை பெற இருந்தது யார்? என்று தொடர் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி புலானாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நந்தம்பாக்கம் அருகே ரூ.3 கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.