

மத்திய குழு, வெறும் ரூ 2096.80 கோடியை தமிழக அரசுக்கு வறட்சி நிதியாக அளிக்க பரிந்துரை செய்துள்ளது. இது போதுமானதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வரலாறு காணாத வறட்சியின் கோரப் பிடியில் தமிழகம் சிக்கித் திணறி வருகின்ற நிலையில், தமிழ்நாட்டை வறட்சியால் பாதித்த மாநிலம் என அறிவித்து, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் ரூ 39,565 கோடி வறட்சி நிவாரணம் கோரியதுடன் மத்திய குழுவை அனுப்பி வைக்கும்படி கோரியது. மத்திய குழு ஜனவரி 22 முதல் 25 முடிய தமிழ்நாட்டின் வறட்சி பகுதிகளை பார்வையிட்டு சென்றது. தற்போது மத்திய குழு, வெறும் ரூ 2096.80 கோடிக்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இச்செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
மத்திய குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள முழுத்தொகையும் கொடுத்தால் கூட எவ்வகையிலும் வறட்சியால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பது சாத்தியமல்ல.
வர்தா புயல் பாதிப்பு குறித்து மத்தியக்குழு பார்வை இட்டு சென்றது. அதன் கதி என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் வறட்சி பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு கோரிய நிதியை மத்திய அரசிடம் பெறுவதற்கு மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் மத்திய அரசு புறக்கணிக்கும் போக்கை கைவிட வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.