

நகரில் உள்ள 40 பூங்காங்களில் புதிதாக கடிகாரங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நடேசன் பூங்கா, பனகல் பூங்கா, முத்துலட்சுமி பூங்கா உள்ளிட்ட ஒன்பது பூங்காக்களில் இதற்கான பணி இறுதிக் கட்டத்தில் இருக்கிறது.
சென்னை மாநகராட்சி விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு 260 பூங்காக்கள் இருந்தன. இவற்றில் 40 பூங்காக்களில் நடை பயிற்சி செல்பவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் வட்ட வடிவ கடிகாரம் அமைக்கப்பட உள்ளது. பூங்காவின் மையப் பகுதியில் இந்த கடிகாரம் அமைக்கப்படும். தி.நகர்
நடேசன் பூங்கா, பனகல் பூங்கா, அடையார் முத்துலட்சுமி பூங்கா உள்ளிட்ட ஒன்பது பூங்காக்களில் இதற்கான பணி இறுதிக் கட்டத்தில் இருக்கிறது.
விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சி பகுதிகளில் 100 பூங்காக்கள் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதில் 83 பூங்காக்கள் அமைக்கப்பட்டு விட்டன. 13 பூங்காக்களில் பணி நடந்து வருகிறது. மீதமுள்ள 4 பூங்காக்களில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மேலும் 100 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் இதுவரை ஆலந்தூர், மணலி, வளசரவாக்கம் உள்ளிட்ட 24 இடங்களில் பணிகள் தொடங்கிவிட்டன. பெரிய நிலப்பரப்பில் கட்டிடங்கள் கட்டும்போது மாநகராட்சிக்கு 10 சதவீத இடம் ஒதுக்க வேண்டும். அதுபோல ஒதுக்கப்படும் இடத்தில்தான் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. திருவொற்றியூர், தேனாம்பேட்டையில் தற்போது இதுபோன்ற இடங்கள் இல்லாததால் மற்ற மண்டலங்களில் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.