

போக்குவரத்து ஊழியர்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டுமென கோரி சிஐடியு, தொமுச, ஏஐடியுசி உட்பட 11 தொழிற் சங்கங்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின.
இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு 2013 14-ம் ஆண்டுக்கு எவ்வித பாகுபாடும், உச்சவரம்பும் இன்றி 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என அனைத்து சங்கங்களின் சார்பாக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு மாதத்துக்கு முன்பாகவே பண்டிகை முன்பணம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இதுவரையில் முன்பணம் வழங்கப்படவில்லை.
மின்வாரியத்தில் போனஸ் வழங்குவது குறித்து அங்குள்ள தொழிற்சங்கங்களை நிர்வாகம் அழைத்து பேசி வருகிறது. ஆனால், போக்குவரத்துத் துறையில் எந்தவித பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. எனவே, தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
குறிப்பாக சென்னையில் மத்திய பணிமனை உட்பட 29 பணி மனைகளில் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்தப் பட்டது. சென்னையில் மட்டுமே தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., பி.எம்.எஸ்., டி.எம்.டி.எஸ்.பி., பி.டி.எஸ்., எம்.எல்.எப்., மற்றும் ஏ.ஏ.எல்.எப். என 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டனர் என்றார்.
30 நிமிடங்கள் காலதாமதம்
11 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் பணிமனைகளில் நேற்று அதி காலையிலேயே ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டதால், காலையில் இயக்கப்படும் முதல் பஸ் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக புறப் பட்டு சென்றது. இதனால், அதி காலையில் பணிக்கு செல்வோர் உள்ளிட்டவர்கள் அவதிப்பட்டனர்.
காஞ்சிபுரத்திலும் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின் முன், விழுப்புரம் மண்டலத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு 25 சதவீதம் தீபாவளி போனஸாக வழங்கக் கோரி, காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்துத் துறையின் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தேமுதிக காஞ்சி தொழிற்சங்க தலைவர் காண்டீபன் தலைமை தாங்கினார். இதில், ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.