Published : 10 Oct 2013 09:27 PM
Last Updated : 10 Oct 2013 09:27 PM

மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்: வைகோ

தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்களே படுகொலை செய்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் வளர்வதற்கு, திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும், மதுவும் காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி அடுத்த வல்லநாட்டுக்கு அருகில் உள்ள குழந்தை ஏசு பொறியியல் கல்லூரியின முதல்வர் சுரேஷ், இன்று காலை, அதே பொறியியல் கல்லூரியின் மூன்று மாணவர்களால், கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

பேருந்துகளில் மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுகளில் இம்மாணவர்கள் நடந்து கொண்ட விதம் கல்லூரியின் ஒழுங்குக்குக் கேடு ஏற்படுத்தும் என்று எண்ணி, இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக நீக்கம் செய்து உள்ளார். அதனால், இம்மாணவர்கள், அவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து உள்ளனர்.

கடிதோச்சி மெல்ல எறிக என்பது போல, ஆசிரியர்கள் கண்டிப்பது, மாணவர்களின் நன்மைக்காகத்தான்; ஒரு தந்தை பிள்ளையைக் கண்டிப்பதைப் போலத்தான். ஆனால், மாணவர்கள், கொடிய ஆயுதங்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது, விதைநெல்லே அழியும் பெருங்கேடு ஆகும். பள்ளி ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களை, கல்லூரி முதல்வரை, பேராசிரியர்களை, மாணவர்கள் தாக்குகின்ற ஒரு நிலை ஏற்படுமானால், பயிரே வேலியை அழிக்கின்ற கேடாக முடியும்.

இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் வளர்வதற்கு, திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும், மதுவும் காரணம் ஆகும்.

இந்தப் படுகொலைக்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, இதைச் செய்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x