Last Updated : 24 Jun, 2017 12:33 PM

 

Published : 24 Jun 2017 12:33 PM
Last Updated : 24 Jun 2017 12:33 PM

மகனின் எல்கேஜி சீட்டுக்காக உயர் நீதிமன்றத்தை நாடிய சென்னை பொறியாளர்

தன்னுடைய மகனின் எல்கேஜி சீட்டை தனியார் பள்ளி ஒன்று தர மறுத்ததற்காக, உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர்.

தங்களுடைய குழந்தைகளுக்காக, பெயர்பெற்ற பள்ளியைத் தேடிக் கண்டுபிடிப்பது பெற்றோர்களின் பெருங்கனவாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக தங்களின் வீட்டுக்கு அருகிலேயே அத்தகையை பள்ளிகளைக் கண்டுபிடிப்பது பெரும்பாடு.

அத்தகைய நேரத்தில் சென்னையைச் சேர்ந்த பொறியாளருக்கு அந்தக் கனவு முளையிலேயே பொசுங்கிவிட்டது. தன் மகனுக்கு எல்கேஜி சீட் மறுக்கப்பட்டதை அடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

பல்லாவரத்தில் குடியிருக்கும் பொறியாளர் பாலாஜி. அவர் தன்னுடைய 3 வயது மகனை அருகிலுள்ள புகழ்பெற்ற பள்ளியில் படிக்க வைக்க ஆசைப்பட்டுள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், ''வீட்டில் இருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள குரோம்பேட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் என் மகனைப் படிக்க வைக்க எண்ணினேன். ஏப்ரல் 1-ம் தேதியே சேர்க்கைக்காக முன்பதிவு செய்தேன்.

ஆனால் 'சில தெரியாத, முறையாகக் கூறப்படாத காரணங்களுக்காக' என் மகனுக்கு சீட் வழங்க நிர்வாகம் மறுத்துவிட்டது. அவர்களிடம் கேட்டபோது, காரணத்தைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சேர்க்கைகள் பள்ளி நிர்வாகத்தின் விருப்பத்தின் பேரில்தான் நடைபெறும் என்றும் கூறினர். இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினேன்'' என்றார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் அளித்த மனுவில் ''சேர்க்கை பள்ளி நிர்வாகத்தின் விருப்பத்தின்பேரில் நடந்திருக்கலாம். ஆனால் என்னுடைய மகனுக்கு பழங்குடி இனத்தைச் சேர்ந்ததாலேயே சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பாகுபாட்டை ஒழித்து, என் மகனுக்கு சீட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா சிபிஎஸ்இ மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x