

தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிக்கவும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் குடித்து 1095 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கள்ளச்சாராய சாவுகள் அதிகரிப்பதற்கு சாராய விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தான் காரணம் என்று மத்திய அரசின் புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ள போதிலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த காரணம் பொருந்தாது. தமிழகத்தில் நச்சுப் பொருட்கள் கலக்கப்பட்ட கள்ளச்சாராயம் தடையின்றி விற்பனை செய்யப்படுவதுதான் இதற்கு முக்கியக் காரணமாகும்.
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அப்போதெல்லாம், தமிழகத்தில் கள்ளச்சாராயமே இல்லை என்றும், மதுக்கடைகளை மூடினால் தான் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்றும் ஆட்சியாளர்கள் கூறிவந்தனர்.
ஆனால், மதுக்கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் கட்டுப்பாடின்றி விற்பனையாகிறது என்பதைத்தான் இந்தக் கள்ளச் சாராய சாவுகள் காட்டுகின்றன. எனவே, மதுக்கடைகள் மூடப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று இதுவரை ஆட்சியாளர்கள் கூறிவந்த வாதங்கள் ஏற்க முடியாதவை
1991 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மலிவுவிலை மதுவை ஒழித்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு அப்பகுதியின் காவல்நிலைய அதிகாரியும், கிராம நிர்வாக அதிகாரியும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவித்தார்.
அதே போன்ற உத்தரவை இப்போதும் பிறப்பித்து, கடுமையாக செயல்படுத்துவதன் மூலம் கள்ளச்சாராயத்தை அறவே ஒழித்துவிட முடியும். எனவே, சொத்தைக் காரணங்களைக் கூறுவதை விட்டுவிட்டு தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தவும், கள்ளச் சாராயத்தை ஒழிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.