திமுகவின் வளர்ச்சியில் முரசொலி யின் பங்கு அளப்பரியது: கருணாநிதி பெருமிதம்

திமுகவின் வளர்ச்சியில் முரசொலி யின் பங்கு அளப்பரியது: கருணாநிதி பெருமிதம்
Updated on
1 min read

திமுகவின் வளர்ச்சியில் ‘முரசொலி’ நாளிதழின் பங்கு அளப்பரியது என அந்நாளிதழின் நிறுவனரும், திமுக தலைவருமான கருணாநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முரசொலி நாளிதழின் 75 ஆண்டு விழாவை (பவள விழா) முன்னிட்டு இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' 10-8-1948-ல் எனது முதல் பிள்ளையான முரசொலி தொடங்கப்பட்டது. பிறந்த நாளைக் காட்டிலும் எனக்கு இனிய நாள் இதுவே. நாளை ஆகஸ்ட் 10-ம் தேதி முரசொலிக்கு 75-வது ஆண்டு தொடக்கம்.

துண்டுத் தாளாக தொடங்கி, வார இதழாக வளர்ந்து, நாளிதழாக செழித்து பீடு நடைபோட்டு வருகிறது முரசொலி. இந்த ஆண்டு முழுவதும் முரசொலிக்கு பவள விழா ஆண்டாக கருதப்படும். 10-8-1992-ல் முரசொலி பொன்விழா முரசொலி மாறன் ஏற்பாட்டில் நடைபெற்றது. 10-8-2017-ல் முரசொலி பவள விழா நடைபெறும்.

இதழ்களைத் தொடங்கும் பலர் வெள்ளி விழா, பொன் விழாவில் பங்கேற்பது உண்டு. ஆனால், முரசொலி பவள விழாவில் அந்த இதழைத் தொடங்கிய நானும் பங்கேற்பது தனிச் சிறப்பு வாய்ந்தது.

இந்த 75 ஆண்டுகளில் முரசொலி சந்தித்த வழக்குகள் ஏராளம். நெருக்கடி காலத்தில் முரசொலியில் நான் எழுத தணிக்கை முறையை திணித்தார்கள். இதற்கு நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெறப்பட்டது. இந்த இடைக்கால தடை இருந்த ஒரு மாத காலத்தில் முரசொலியில் சுதந்திரமாக எனது எழுதுகோல் சுழன்றது. பிறகு அந்தச் சுதந்திரம் மீண்டும் பறிக்கப்பட்டது. நெருக்கடி காலத்தில் ‘சர்வாதியாகிறார் இந்திரா காந்தி’ என முரசொலி வெளியிட்ட கேலிச் சித்திரத்தை ‘நியூஸ் வீக்’ வெளியிட முரசொலி உலகம் முழுவதும் பரவியது. இதனால் அன்று முரசொலி ஆசிரியராக இருந்த முரசொலி மாறன் சிறையில் பெரும் பாதிப்புக்கு ஆளானார்.

திமுக மீதான குற்றச்சாட்டுகள், தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் நாளிதழாக முரசொலி விளங்கியது. திமுக அரசின் சாதனைகளை மக்களுக்கு கொண்டுச் செல்லும் அரியதொரு வாகனமாக முரசொலி பயன்பட்டது. திமுகவின் வளர்ச்சியில் முரசொலியின் பங்கு அளப்பரியது.

1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது முரசொலி அலுவலகமும் தாக்கப்பட்டது. அலுவலகத்தில் பெரும்பாலான பகுதிகள் கொளுத்தப்பட்டன. நீண்டகால முரசொலி கோப்புகள் தீயில் கருகின.

முரசொலியின் 75 ஆண்டு கால வளர்ச்சியில் இடையிடையே சில தொய்வுகள் உண்டு. ஆனால் என் தலை என்றைக்கும் யாரிடமும் தொங்கியதில்லை. நிமிர்ந்து நின்று நான் முரசு கொட்டியதற்கு பெரிதும் பாடுபட்ட முரசொலி மாறன், முரசொலியின் இன்றைய ஆசிரியர் முரசொலி செல்வம், எனக்கு ஈடுகொடுத்து அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள், முரசொலி சந்தாவை அதிகரிக்க பாடுபடும் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்கள் ஆகியோருக்கு இந்த பவள ஆண்டில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in