Published : 04 Jan 2017 08:43 AM
Last Updated : 04 Jan 2017 08:43 AM

காரைக்கால் அருகே புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார் படுகொலை

தொழிலதிபர் கொலையில் முன்விரோதம் காரணமா?

காரைக்கால்புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே பட்டப்பகலில் முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர் வி.எம்.சி.சிவக்குமார் (66). இவர் புதுச்சேரி அரசில் அமைச்சராகவும், சபாநாயகராகவும் இருந்துள்ளார். மாணவப் பருவத்தில் திமுகவில் இணைந்த இவர், 1977-ல் காரைக்கால் மாவட்டம் நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1980-ல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது புதுச்சேரி அரசின் வேளாண் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 1985,1990,1991 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.

பின்னர், 1996-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று சபாநாயகராகப் பணியாற்றினார். 2001, 2006 தேர்தல்களிலும் அதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவில் வாய்ப்பு அளிக்கப்படாததால் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏவாகச் செயல்பட்டார். அப்போது, காரைக்கால் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராகவும், புதுச்சேரி சாராய வடிகால் நிறுவன தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் நிரவி- திருப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்ட சிவக்குமார் தற்போதைய திமுக எம்எல்ஏ கீதா ஆனந்தனிடம் தோல்வியடைந்தார்.

2013-ல் தொழிலதிபர் ராமு (எ) ராதாகிருஷ்ணன் காரைக்காலில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவருக்குத் தொடர்பு இருக்கலாம் என பேசப்பட்ட நிலையில் இவருக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காரைக்கால் நிரவி பகுதியில் திருமண மண்டபம் ஒன்றைக் கட்டி வந்தார். அந்த கட்டுமான பணிகளைப் பார்வையிட நேற்று பகல் 12 மணியளவில் தனது காரில் பாதுகாப்புக் காவலர் மற்றும் ஆதரவாளர்களுடன் சிவக்குமார் அங்கு சென்றார்.

கட்டிடத்தின் உள்ளே பணிகளை பார்வையிட்டுக்கொண்டு இருந்த போது, வெளியில் வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் தவிர மற்ற அனைவரும் வெளியில் வந்த நிலையில், திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 6 பேர் அரிவாளால் சிவக்குமாரின் தலை மற்றும் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தலை துண்டான நிலையில், அந்த இடத்திலேயே சிவக்குமார் உயிரிழந்தார். வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

தகவலறிந்து அங்கு வந்த காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் குணசேகரன், வம்சீதர ரெட்டி மற்றும் போலீஸார், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நிரவி போலீஸார், சிவக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுக்கடை மீது குண்டு வீச்சு

இந்த கொலை நடைபெற்ற பின்னர் வாஞ்சூரில் உள்ள சிவக்குமாருக்குச் சொந்தமான மதுபானக் கடையின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொழிலதிபர் ராமு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்பட்ட விரோதத்தின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலை சம்பவத்தால் திருமலைராயன்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், காரைக்கால் மாவட்டம் நிரவி, திருமலைராயன் பட்டினம் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முதல் நாளை (ஜன.5) நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.

வி.எம்.சி.சிவக்குமாருக்கு மனைவி சுசீலா, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x