Published : 25 Aug 2016 10:47 AM
Last Updated : 25 Aug 2016 10:47 AM

தேசிய கண்தான இருவார விழா இன்று தொடக்கம்: கண் தானம் கிடைக்காமல் 10 லட்சம் பேர் காத்திருப்பு

இந்தியாவில் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்து தானம் வழங்கப் படும் கண்களை எதிர்பார்த்து 10 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். கண் தானத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாமையே இந்த நிலைக்கு காரணம். இதைத் தவிர்க்க இன்று (ஆக.25) தொடங்கும் தேசிய கண்தான விழிப்புணர்வு இரு வார விழாவை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய கண்தான இருவார விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25 முதல் செப். 8-ம் தேதிவரை அனுசரிக் கப்படுகிறது. இந்த ஆண்டில் உச்ச பட்ச அளவுக்கு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கண் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்தானம், மாற்று சிகிச்சை யில் மதுரை அர்விந்த் கண் மருத் துவமனை குறிப்பிட்ட மைல் கல்லை எட்டியுள்ளது. இம்மருத் துவமனை கருவிழி மாற்று அறுவை சிகிச்சை துறைத் தலைமை மருத்துவர் என்.வெங்கடேஷ் பிரஜன்னா கூறியதாவது:

இறந்தவர்களிடம் இருந்து மட்டுமே கண்களைத் தானம் பெறு கிறோம். இதில் வியாபாரம் நடக்க வாய்ப்பே இல்லை. ஒரு கரு விழியை எடுத்து தகுதியானது தானா எனப் பரிசோதிக்க ரூ.4 ஆயிரம் செலவாகும். ஏழை மக்களுக்கு இலவசமாகவே தானம் பெறப்பட்ட கண்களை நாங்கள் பொருத்துகிறோம். கட்டணப் பிரிவில் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும்.

ஒருவர் தனது இரு கண்கள் மூலம் 2 பேருக்கு பார்வை வழங்குகிறார். தானம் பெறப் படுபவரின் கருவிழி பாதிக்கப் பட்டிருக்கக்கூடாது. எச்ஐவி, ரேபிஸ் போன்ற வைரஸ் நோயால் இறந்திருந்தவர்களின் கண்களைத் தானம் பெற முடியாது. மஞ்சள் காமாலை பாதிப்பில் ஹெபடிடிஸ் பி பாதிப்பு இருந்தாலும் அவர் களின் கண்களை தானம் பெற முடியாது.

இறந்தவரின் உடலில் இருந்து 6 மணி நேரத்துக்குள் கண்களை அகற்றிவிட வேண்டும். இந்தக் கண்களை 5 முதல் 6 நாட்களில் பொருத்திவிட வேண்டும்.

கண் மாற்று சிகிச்சை மூலம் 70 சதவீத பார் வையைத் திரும்ப கொண்டு வரலாம். யாருடைய உதவியும் இன்றி வாழக்கூடிய அளவுக்கு நல்ல பார்வையைக் கண்தான அறுவை சிகிச்சை மூலம் அளிக்க முடியும். தமிழ்நாடுதான் இந்தியா விலேயே கண்தானத்துக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.

முன்பு குஜராத் முன்னிலையில் இருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் முந்திவிட்டது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானில் கண்தான அறுவை சிகிச்சைக்காக 6 மாதங்கள் காத்திருக்கணும். தமிழகத்தில் ஒரே நாளில் கண்கள் பொருத்தப்படுகிறது.

கண்தானத்தில் தமிழகம் முன் னிலையில் இருப்பதற்கு உறுப்பு தானத்துக்கு அரசு அளித்துவரும் ஊக்கமும் முக்கிய காரணமாகும். எல்லோருக்கும் போய்ச் சேரும் வகையில் அதிகளவில் விழிப் புணர்வை ஏற்படுத்த இந்த கண் தான இருவார விழாவைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்திய கண் வங்கி முன்னாள் தலைவர் எம்.சீனிவாசன் கூறிய தாவது:

இந்தியாவில் ஆண்டுக்கு 40 ஆயிரம் கண்கள் மட்டுமே தான மாக கிடைக்கின்றன. இதில் தமிழகத்தின் பங்கு மட்டும் 9 ஆயிரம். இதில் அர்விந்த் மருத் துவமனை மூலம் 5,700 கண்கள் பெறப்படுகின்றன. ஆண்டுதோறும் கருவிழியால் பார்வை இழப்போர் எண்ணிக்கை புதிதாக 30 ஆயிரம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. ஏற்கெனவே நாட்டில் 10 லட்சம் பேர் கருவிழியால் பார்வை யின்றி கண்களை எதிர்பார்த்து காத்திருக் கிறார்கள். இந்த நிலையை ஆண்டுக்கு ஒரு லட்சம் கண்கள் தானம் கிடைத்தால் சரி செய்ய லாம். தற்போதைய நிலை நீடித்தால் பாதிப்பும் தொடரும்.

6 மணி நேரத்துக்குள் கண்தானம்

இந்தியாவில் ஓராண்டில் விபத் தில் மட்டும் 1.60 லட்சம் பேர் இறக் கின்றனர். இவர்களின் கண்கள் தானம் கிடைத்தால் மிக உதவியாக இருக்கும். விபத்துகள் போலீஸ் வழக்குகள் சம்பந்தப்பட்டவை என்பதால் பல்வேறு நடைமுறை கள் முடிந்து 6 மணி நேரத்துக்குள் கண்களைத் தானம் பெற முடியாத நிலை உள்ளது.

இத்தகையோரின் கண்களை 6 மணி நேரத்துக்குள் தானம் பெறும் வகையில் உரிய மாற்றங்களை அரசு மட்டத்தில் மேற்கொள்ள வேண்டும்.

கண்தானத்தில் உலகிலேயே அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு உறவினர்கள் சம்மதம் இல்லாமலேயே கண்கள் தானம் பெறப்படுகிறது. அங்கு தற்போது ஆண்டுக்கு 60 ஆயிரம் கண்கள் பெறப்படுகின்றன. அவர்களுக்கு 45 ஆயிரம் போக மீதி கண்களை இதர நாடுகளுக்கு வழங்குகின்றனர்.

இந்த நிலையை இந்தியாவில் கொண்டுவர விழிப்புணர்வினால் மட்டுமே சாத்தியம். இதற்கு அரசு, சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் கண்தானம் குறித்த விழிப்புணர்வை பாமர மக்களி டமும் கொண்டு சேர்க்க உத்வே கத்துடன் உழைக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x