

தமிழகத்தில் உள்ள கடற்கரை சுற்றுலா தலங்களை மேம்படுத்து வதற்காக மத்திய அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய் துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு ‘ஸ்வதேஷ் தர்ஷன்’ (பாரத தரிசனம்) என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள கடற்கரை சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய் துள்ளது. இதன்மூலம் சென்னை, மாமல்லபுரம், ராமேசுவரம், மணப்பாடு, கன்னியாகுமரி ஆகிய கடற்கரை பகுதிகளில் மேம்பாட்டு வசதிகள் செய்யப்பட உள்ளன.
குறிப்பாக, கடற்கரை பகுதிகளில் ஒளி, ஒலி கண்காட்சி அமைப்பது, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் பாலம் அமைப்பது, கடற்கரை பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்துக்கு ரூ.100 கோடியும், உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ.83 கோடியும், உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.70 கோடியும், சிக்கிம் மாநிலத்துக்கு ரூ.95 கோடியும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.