

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 14-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக திமுக கொறடா சக்கரபாணி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெறும். கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
மானியக் கோரிக்கை விவாதத்தின்போது யார் யார் பேசுவது?, நெருக்கடியான சூழ்நிலை உருவாகும்போது எப்படி நடந்து கொள்வது? அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவை விமர்சித்தால் எப்படி பதிலளிப்பது? ஆகியவை குறித்து திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.