Published : 02 Mar 2017 08:28 AM
Last Updated : 02 Mar 2017 08:28 AM

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ‘சந்திரயான் 2’ விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தகவல்

‘சந்திரயான் 2’ விண்கலத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் எ.எஸ்.கிரண் குமார் தெரிவித்தார்.

வேல்ஸ் பல்கலைக்கழக 7-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்லாவரத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஐசரி கே.கணேஷ் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவரும் இந்திய அணுசக்தித் துறையின் செயலருமான பத்மபூர சேகர் பாசு, போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பி.சிவக்குமார், நடிகர் சத்யராஜ் ஆகியோருக்கு சிறப்பு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. 49 முனைவர் பட்டங்கள் உட்பட 1,872 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய அரசின் விண்வெளித்துறைச் செயலரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவருமான எ.எஸ்.கிரண் குமார் பேசும்போது, “இந்தியா பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி விண்வெளி ஆராய்ச்சிகளில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. விரைவில் இஸ்ரோ நேவிகேட்ஸ் செயற்கைக்கோளை அமைக்கவுள்ளது. இது மீனவர்களுக்கு மீன் இருக்கும் இடத்தை கண்டறிய உதவும். கடலில் உள்ள ஆபத்துக்களை தெரிவிக்கும். தட்பவெப்ப நிலையைப் பற்றி குறிப்பு அனுப்பும்” என்றார்.

நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய கிரண்குமார், “ சுந்திரயான் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் மகேந்திரகிரி மற்றும் சித்திரதுர்காவில் உள்ள இஸ்ரோ மையங்களில் வேகமாக நடைபெற்று வருகின்றன. 2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் ‘சந்திரயான் 2’ விண்ணில் செலுத்தப்படும். வீனஸ் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவது குறித்து விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிறகு அனுமதிக்கு அனுப்பப்பட்டு, அனுமதி கிடைத்தவுடன் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x