

சீனப் பட்டாசுகளை இந்தியாவில் முழுமையாக தடை செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் தமிழகத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிக அளவில் பட்டாசு தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. சிவகாசிப் பகுதியில் 1923 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பட்டாசுத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் கடந்த 90 வருடத்திற்கும் மேலாக இயங்கி வருகின்றன.
மேலும் கேரளா, மஹாராஸ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற பகுதிகளிலும் குறைந்த அளவில் பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிசைத் தொழிலாகவும் மற்றும் சிறு, குறு தொழிலாகவும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சிவகாசிப் பகுதியில் தற்போது சுமார் 750 க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிலில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகவும், சுமார் 3 லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக சிவகாசிப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் பெரும்பாலானோர் வேறு தொழிலில் ஈடுபட முடியாமல் ஆண்டு முழுவதும் பட்டாசுத் தொழிலையே பெரிதும் நம்பி இருக்கிறார்கள். சிவகாசிப் பகுதிகளில் தயாரிக்கப்படும் பட்டாசு வகைகள் தான் இந்திய அளவில் மிகவும் பிரபலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
1993 முதல் 1996 வரை சுமார் 110 கண்டெய்னர்களில் 20 ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியப் பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1997 ல் இலங்கையில் நடைபெற்ற கலவரத்தால் கொழும்பு துறைமுகம் இந்தியப் பட்டாசுகளை கொண்டு செல்வதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்தது. சிங்கப்பூர் துறைமுகமும் இந்தியப் பட்டாசுகளை கொண்டு செல்வதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்தது.
எனவே, மத்திய அரசு இலங்கை மற்றும் சிங்கப்பூர் அரசோடு பேசி அந்நாட்டின் துறைமுகம் வழியாக ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்தியப் பட்டாசுகளை கொண்டு செல்வதற்கு அனுமதியைப் பெற வேண்டும். மத்திய அரசு நம் நாட்டில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் இருந்தும், வான்வழி மூலமாகவும் எந்தவித அபாயமும் ஏற்படாத வண்ணம், முழு பாதுகாப்பு அம்சங்களுடன் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
சீனப் பட்டாசுகளில் அரசு தடை செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைடு பயன்படுத்தப்படுவதால், இதில் உள்ள அதிக நச்சுத் தன்மை உடல் நலனுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும். எனவே இந்த வகைப் பட்டாசுகள் நம் நாட்டிற்குள் எங்கு விற்கப்பட்டாலும் அதனைக் கண்டறிந்து முழுமையாக அழித்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனப் பட்டாசுகளில் இருக்கின்ற நச்சுத்தன்மையை காரணம் காட்டி வெளிநாடுகள் அப்பட்டாசுகளை வாங்க மறுக்கின்றனர். இச்சூழலில் இந்தியப் பட்டாசுகளின் தரத்தை வெளிநாடுகளுக்கு விளக்கி அந்நாடுகள் நம் பட்டாசுகளை வாங்குவதற்கு அனுமதியைப் பெற மத்திய அரசு முன்வர வேண்டும். சீனப் பட்டாசுகள் நம் நாட்டில் விற்பனைக்கு வந்தால் உள்நாட்டில் தாயாரிக்கப்படும் பட்டாசுகள் அதிக அளவில் தேக்கமடைந்து, பட்டாசுத் தயாரிக்கும் தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் இத்தொழிலை நம்பியிருக்கின்ற லட்சக்கணக்கானோர் பெரிதும் பாதிக்கப்படுவர்.
எனவே, நம் நாட்டிற்குள் சீனப் பட்டாசுகள் மறைமுகமாகவோ அல்லது நேர்முகமாகவோ இறக்குமதி செய்யப்படக்கூடாது. மேலும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இப்போதிருந்தே சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் தீபாவளி நெருங்கி வருகின்ற இந்த வேலையில் எந்த ஒரு கடையிலும் அல்லது மறைமுகமான இடங்களிலும் சீனப் பட்டாசு விற்பனை என்பது அறவே அனுமதிக்கப்படக்கூடாது.
சீனப் பட்டாசுகள் விலை குறைவு என்பதற்காக அதனை யாரும் வாங்கி விற்க முன்வரக்கூடாது என்பதற்கும், அப்பட்டாசுகளின் தீங்கினை பொது மக்களுக்கு விளக்கி அதனை வாங்க வேண்டாம் என்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதனையும் மீறி எவரேனும் சீனப்பட்டாசுகளை விற்க முன்வந்தால் அவர்களுக்கு சட்டத்தின் அடிப்படையில் கடுமையான தண்டனைப் பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை உள்நாட்டின் தேவைக்குப் போக மீதமுள்ளவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும், சீனப் பட்டாசுகளை இந்தியாவில் முழுமையாக தடை செய்வதற்கும் அனைத்து முயற்சிகளிலும் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு நம் நாட்டில் பட்டாசுத் தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் இத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளிகளின் நலன் காக்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.