Published : 03 Apr 2017 11:34 AM
Last Updated : 03 Apr 2017 11:34 AM

மண்ணச்சநல்லூர் அருகே பல்லவர், சோழர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் அருகே பல்லவர், சோழர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மண்ணச்சநல்லூரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகியமணவாளம் கிராமத்தில் மேற்றளி என்ற பழமையான பல்லவர் கால சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் அர.அகிலா, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் மு.நளினி ஆகியோர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், இதுவரையில் படியெடுக்கப்படாத பல்லவர் மற்றும் சோழர் காலக் கல்வெட்டுகள் சிலவற்றை கண்டறிந்தனர்.

இந்தக் கல்வெட்டுகளை மேலாய்வு செய்த டாக்டர் மா.இராச மாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா.கலைக்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தக் கோயிலிலிருந்து 1992-ம் ஆண்டில் நான்கு கல்வெட்டுகள் மத்திய அரசின் கல்வெட்டுத்துறையால் படியெடுக்கப்பட்டது. தற்போதைய கள ஆய்வில் கூடுதலாக 11 புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன.

இந்த புதிய கண்டுபிடிப்புகளுள் பொதுக்காலம் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மப் பல்லவரின் இரு கல்வெட்டுகள் மிகப் பழமையானவை. அவை பொறிக்கப்பட்டுள்ள கருங்கல் பலகை கோயிலின் நந்தி மண்ட பத்துக்கு அருகே காணப்படுகிறது. பலகையின் ஒருபுறம் பெரிய அளவிலான முத்தலைஈட்டியும், மறுபுறம் அரிவாள், சுருள்கத்தி, துரட்டி ஆகியவையும் செதுக்கப்பட் டுள்ளன.

நந்திவர்மரின் 15-ம் ஆட்சி யாண்டில் பொறிக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டுகள் இரண்டும் மனத்துள் அரைசன், குடிதாழிக் கோவணத்தான் என்று இரு இடையர் பெருமக்கள் மேற்றளிக் கோயிலில் விளக்கேற்றிய தகவலை தருகிறது.

பொதுக்காலம் 10-ம் நூற் றாண்டைச் சேர்ந்த முதல் பராந்தகச்சோழரின் நான்கு கல்வெட்டுகள் கண்டறியப் பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று மேற்றளிக் கோயிலின் கருவிக் கலைஞர்களுள் ஒருவரான பாதசிவன், இக்கோயிலில் பகல் விளக்கு ஏற்றுவதற்காக நெற்குப்பையைச் சேர்ந்த கீழூர் என்ற கிராமத்தில் தரிசாய்க் கிடந்த நிலத்துண்டை பண்படுத்திக் கோயிலுக்கு அளித்ததாகக் கூறுகிறது.

அழகிய மணவாளத்துக்கு அருகிலுள்ள பாச்சில் கிராமத்தில் மணிக்கிராமத்து வணிகர்கள் இருந்ததாகக் கூறும் மற்றொரு கல்வெட்டு, அவர்களுள் ஒருவரான சிராகன் கோயிலுக்கு அளித்த நிலக்கொடையைப் பகிர்ந்து கொள்கிறது.

சுந்தரசோழர் அல்லது முதலாம் ராஜராஜனுடையதாகக் கொள்ளத்தக்க 10-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு, மேற்றளிக் கோயிலில் ஆடல்வல்ல பெண்கள் இருந்ததைத் தெரிவிப்பதோடு, அவர்களுள் ஒருவரான தளித்தேவனார் மகள் நக்கன் பாவையான வல்லானைபாகத் தலைக்கோலி இக்கோயிலில் பகல் விளக்கேற்ற ஏழு கழஞ்சுப் பொன் அளித்ததாகவும், அதைப் பெற்ற கோயில் பணியாளர் சிங்கன் ஆச்சன் அது கொண்டு நிலத்துண்டொன்றை விலைக்குப் பெற்று அதன் விளைவால் விளக்கேற்ற ஒப்பியதாகவும் கூறுகிறது. தலைக்கோலி என்பது ஆடற்கலையில் வல்ல பெண்களுக்குச் சோழர் காலத்தே அளிக்கப்பெற்ற மிகச்சிறந்த பட்டமாகும்.

இந்த புதிய கல்வெட்டுகளால் அந்த பகுதியில் இருந்த சில ஊர்களின் பெயர்களும், நிலப் பண்படுத்தல் தொடர்பான செய்திகளும், நீர்ப்பாசனம் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தகவல் கல்வெட்டுத் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x