Published : 01 Jun 2016 08:03 AM
Last Updated : 01 Jun 2016 08:03 AM

மதுரவாயல்-சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்ற மாற்றம் செய்யவும் தயாராக உள்ளோம்: சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தகவல்

மதுரவாயல்-சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்ற அத்திட்டத்தில் ஏதேனும் மாற்றம் செய்யவும் நாங்கள் தயாராக உள்ளோம்’’ என சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் கூறினார்.

சென்னை துறைமுகத்தின் வருடாந்திர ஆண்டறிக்கை குறித்து விளக்குவதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சிரில் ஜி. ஜார்ஜ் கூறியதாவது:

சென்னை துறைமுகத்தில் அதிக எடை கொண்ட சரக்குகளை நிறுத்துவதற்கு வசதியாக கப்பல் நிறுத்தும் தளம் 15.5 மீட்டர் அளவு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிக ஆழம் கொண்ட கப்பல் நிறுத்தும் தள வசதி கொண்ட நாட்டின் முதல் துறைமுகம் என்ற பெருமை சென்னை துறைமுகத்துக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம், இனி 8 ஆயிரம் கன்டெய்னர்களை ஏற்றி வரும் சரக்குக் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு இனி எளிதாக வந்து செல்ல முடியும்.

சென்னை துறைமுகம் கடந்த 2014-15-ம் ஆண்டில் 52.54 மில்லியன் டன் சரக்கை கையாண்டது. ஆனால், 2015-16-ம் ஆண்டில் 50.06 மில்லியன் டன் சரக்கு மட்டுமே கையாளப்பட்டது. அதாவது 4.7 சதவீதம் குறைந்து விட்டது. அதேசமயம் துறைமுகத்தின் வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த 2014-15-ம் நிதியாண்டில் நிகர வருவாய் 23.09 கோடியாக இருந்தது. இது 2015-16-ம் ஆண்டில் 42.20 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், சென்னை துறைமுகத்தில் 37 மீட்டர் நீளம், 4.5 மீட்டர் உயரம் கொண்ட பெரிய அளவிலான சரக்கு கன்டெய்னர்களை கையாளும் அளவுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரேடியோ அலைவரிசை மூலம் கன்டெய்னர்களை சோதனையிடும் கருவி (ஆர்.எப்.ஐ.டி.) பொருத்தப்பட்டுள்ளது. இதை நாளை (இன்று) மத்திய சுங்கத்துறை மற்றும் கலால்துறை வாரியத்தின் தலைவர் நஜிப் ஷா தொடங்கி வைக்கிறார். அதேபோல், திருவொற்றியூர் பவானி அம்மன் கோயில் அருகே கன்டெய்னர்களை சோதனை இடுவதற்காக சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ரயில்கள் மூலம் பெங்களூருக்கு கொண்டு செல்வதற்காக தனியார் நிறுவனம் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மேலும் ஒரு சரக்கு ரயில் சேவை இம்மாதம் 11-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம், சாலை மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

மதுரவாயல்-எண்ணூர் துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசிடம் இருந்து சில நல்ல தகவல்கள் கிடைத்துள்ளன. இத்திட்டத்தை நிறைவேற்ற அத்திட்டத்தில் ஏதேனும் மாற்றம் செய்யவும் நாங்கள் தயாராக உள்ளோம். மாநில அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்தில் நிலக்கரி, இரும்பு இறக்குமதி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண சிறப்பு குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு சிரில் ஜி.ஜார்ஜ் கூறினார்.

இச்சந்திப்பின்போது, துறைமுக போக்குவரத்து மேலாளர் பி.விமல், தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் பி.சண்முகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x