

தமிழக-கர்நாடகா மாநிலங்களிடையே 11-வது நாளாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வார விடுமுறையை முன்னிட்டு நேற்று கர்நாடகாவில் இருந்து தமிழக எல்லையான ஜூஜூவாடிக்கு நடந்து வருவோரின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது.
காவிரி பிரச்சினையால், கடந்த வாரத்தில் 5 நாட்களும் இந்த வாரத்தில் 6 நாட்களும் ஓசூர் எல்லைப் பகுதியிலேயே தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டு வருகின்றன. ஓசூர் எல்லைப்பகுதியான ஜூஜூவாடியில் தமிழகப் பேருந்துகள் நேற்றும் நிறுத்தப்பட்டன. தமிழக பதிவெண் உள்ள வாகனங்கள் கர்நாடக மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
சரக்கு வாகனங்கள், சிப்காட் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டன. வார விடுமுறையை முன்னிட்டு நேற்று காலை முதலே அத்திப்பள்ளி வழியாக ஜூஜூவாடிக்கு நடந்து வரும் மக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் தமிழக அரசு பேருந்துகள் எல்லைப்பகுதியில் அதிக அளவில் இயக்கப்பட்டன.
கடந்த சில நாட்களாக பயணிகளின் நலன் கருதி ஓசூர் எல்லையான ஜூஜூவாடியில் இருந்து தமிழகத்தில் உள்ள பிற நகரங்களுக்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு, நேற்று முதல் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்தே தமிழக நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து ஜூஜூவாடி வரை நடந்து வருபவர்கள், ஓசூர் பேருந்து நிலையத்துக்கு வருவதற்கு வசதியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
கடையடைப்பு முடிந்த பிறகு நேற்று முன்தினம் மாலை தனியார் பேருந்துகள் ஜூஜூவாடி வரை இயங்கத் தொடங்கின. இதற்கு அரசு பேருந்து ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அடுத்து தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு, அரசு பேருந்துகள் மட்டுமே இன்று இயக்கப்பட்டன.
கடந்த 6 நாட்களாக கர்நாடக எல்லையில் இருந்து தமிழக எல்லையான ஜூஜூவாடிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து வருகின்றனர். இவர்களில் ஓசூரில் இருந்து பெங்களூரு நகருக்கு பணி நிமித்தமாக சென்று வருபவர்கள், தினமும் நடந்து செல்வதால் சலிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து ஓசூரைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் கூறும்போது, ‘‘நான் தினமும் பேருந்தில் பெங்களூருக்கு வேலைக்கு சென்று வருகிறேன். ஓசூர் எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்படுவதால் என்னைப்போல தினமும் பேருந்துகளை பயன்படுத்தி வேலைக்கு செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். தினமும் எல்லைப்பகுதியில் நடந்து நடந்து சலிப்படைந்துள்ளோம். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்’’ என்றார்.