

தமிழக விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் எவ்வித அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கடும் இன்னல்களுக்கு இடையே உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு, உரிய விலை வழங்குவது, விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது.
நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்த அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. தமிழகத்துக்கு புதிய ரயில்களோ, புதிய வழித்தடங்களோ அறிவிக்கப்படவில்லை. இது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.
சாலை மேம்பாடு மற்றும் ரயில்வே துறையில் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு, நெசவுத் தொழிலுக்கான வரி குறைப்பு, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் ரொக்கத் தொகையில் மாற்றம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.