

ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்துவிட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக்கோரி கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் நேற்று கடைகளை அடைத்துவிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகள், தொழிலாளர்கள் என சுமார் 1,500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் தலையை மொட்டை அடித்துக் கொண்டனர்.
இதுதொடர்பாக சென்னை பழம் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சீனிவாசன் கூறியதாவது:
கோயம்பேட்டில் உள்ள காய்கறி, பூ, பழம் மார்க்கெட்டில் உள்ள சுமார் 5 ஆயிரம் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. தினமும் வெளி மாநிலங்கள் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சுமார் 300 லாரிகளில் காய்கறிகள் வரும். கடையடைப்பு போராட்டம் காரணமாக லாரிகள் வருவது நிறுத்தப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் பல கோடி மதிப்பிலான வியாபாரம் நடைபெறும். இதன் மூலம் வியாபாரிகளுக்கு சுமார் ரூ.5 கோடி லாபம் கிடைக்கும். இவை அனைத்தையும் இழந்து, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.